கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள திருவாமூர் ஊராட்சி, காமாட்சிபேட்டை பகுதியில் உள்ள 'கெடிலம்' ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆற்றில் தேவையான அடிப்படை வசதிகள் சில மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது.
ஆனால், மணல் குவாரி அமைப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், கெடிலம் ஆற்றில் விவசாயிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு, மணல் எடுத்தால் விவசாயம் பாதிப்படையும் எனக் கூறியிருந்தார். ஆனால், தொடர்ந்து மணல்குவாரி அமைப்பதற்கான பணி நடத்த அதிகாரிகள் ஆயத்தம் ஆகிவருவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மூன்று முறை நடந்த சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழுத் தலைவர் சபா.பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன், சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுகுணா, உதவி பொறியாளர்கள் பாலாஜி, சுகுமார், பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கிராம மக்கள் தரப்பில் மணல் குவாரி அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
“மணல் குவாரி அமைத்தால், 15 கிராமத்தினர் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம், தீக்குளிப்போம்” எனக் கூறினர். அதிகாரிகள் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனேதும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை மீண்டும் கைவிடப்பட்டது. மீண்டும் கிராம மக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.