திமுக ஆட்சியின் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கடந்த 26ஆம் தேதி தேனியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்த வந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பேசும்போது 'அதிமுக தலைமை அலுவலகத்தைச் சூறையாடிய ஓபிஎஸ்சின் வீட்டை சூறையாடுவதற்கு எவ்வளவு நேரமாகும். ஓபிஎஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்திற்கு தேனி மாவட்டத்தில் செல்வாக்கு இல்லை. அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து நான் வெளியேறி விடுகிறேன்'' என்று கூறியிருந்தார். இப்படி ஓபிஎஸ்சையும், அவரது மகன் ரவீந்திரநாத்தையும் கடுமையாக பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ஓபிஎஸ் குடும்பத்தினரும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் உதயகுமார் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியிலிருந்தனர்.
இந்தநிலையில்தான் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ''எம்.பி.ரவீந்திரநாத்துக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்கிறார்கள். முதலில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அப்போது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் ஆர்.பி. உதயகுமார் தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓ.பி.எஸ்.சின் வீட்டை தொட்டுப் பார்த்துவிட்டு தேனி மாவட்டத்தை விட்டு சென்று பார்க்கட்டும் பார்ப்போம்' என்று கூறினார்.