கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசால் பொங்கல் பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையும் கடந்த காலங்களில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த பொங்கலன்று தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்கள் தரமற்ற நிலையில் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொங்கல் பரிசுப் பொருட்களாகக் கொடுக்கப்படும் முந்திரி, திராட்சை, வெல்லம் ஆகிய அனைத்துப் பொருட்களும் வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுவதால் இப்படித் தரமற்ற முறையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் பொங்கல் தொகுப்பாக அரசு சார்பில் கொடுக்கப்படும் பொருட்களை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க மண் பானையுடன் பொங்கல் பொருட்களை வழங்கினால் மண்பாண்டம் செய்தல், வெல்லம் காய்ச்சுதல் உள்ளிட்ட அழிந்து வரும் தொழில்களைக் காப்பாற்ற முடியும். அதேநேரம் அரசுக்கு போக்குவரத்து செலவும் மிச்சம் எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.