மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 09.05.2024 அன்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. அவர் சார்பில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருதை பெற்றிருந்தார். விருதை வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை அவருடைய ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சென்னை வந்துள்ள அவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் விருதினை வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இந்தப் புகழ், இந்த விருது எல்லாமே விஜய்காந்தையே சேரும். இதே விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் கதர் வேட்டி, கதர் சட்டை போட்டுக்கொண்டு நெற்றி நிறைய திருநீறு வைத்துக்கொண்டு தமிழர்களின் பண்பாட்டை அங்கு நிலைநாட்டி அந்தப் பெருமைக்குரிய விருதை வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய வரமாக இருந்திருக்கும். ஆனால் காலம் தாழ்ந்து கிடைத்தாலும் அந்த விருதை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு மீண்டும் நன்றிகளை சொல்கிறேன். அது மட்டும் இல்லை அதற்குப் பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் விருந்து கொடுத்தார்கள். அனைத்து விருது பெற்றவர்களையும் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். அமித்ஷாவிற்கு இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
அடுத்த நாள் ராஷ்டிரபதி பவன், ஓல்ட் பிரைம் மினிஸ்டர் ஹவுஸ், வார் மெமோரியல் உள்ளிட்ட இடங்களுக்கு விருது பெற்றவர்களை அழைத்துச் சென்று நேரடியாக காண்பித்தார்கள். அதில் நாங்களும் கலந்து கொண்டோம். அந்தப் பெருமைமிக்க தருணதத்தின் நிமிடத்தில் விஜயகாந்தை தான் நினைத்துக் கொண்டேன். அது முடிந்து நேற்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் மூலமாக விஜயகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை செய்தார்கள். அதற்கு உறுதியாக தேமுதிக சார்பில் டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். விஜயகாந்த் விழா என்றாலே சாப்பிடணும் எனச் சொல்லி அனைவருக்கும் உணவு செய்து கொடுத்தோம். அத்தனைப் பேரும் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் போனார்கள்'' என்றார்.