''தேவையான தண்ணீரைப் பெற முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேகதாது என்ற ஒரு புதிய அணை தேவையா. அது தேவையற்ற ஒன்று. அதைக் கட்டினால் மீண்டும் தமிழகம் பாலைவனமாகிவிடும்'' என அதிமுக தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக தம்பிதுரை பேசுகையில், ''மேகதாது அணை கட்டுவது என்பது நடக்க முடியாத காரியம். போகாத ஊருக்கு வழி காட்டுவது போல இன்றைய கர்நாடக அரசு மற்றும் அமைச்சர்கள் எல்லாம் வழிகாட்டிக் கொண்டு மக்களை திசைத் திருப்பிக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் சரியான ஒரு தீர்ப்பை தந்து இருக்கிறது. ஜெயலலிதாவின் முயற்சி காரணமாக அவருடைய வெற்றியின் காரணமாக உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு தந்து, தீர்ப்பாணையம் என்ன சொல்கின்றதோ அதன்படி செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியை உச்ச நீதிமன்றத்தில் பெற்று இருக்கிறோம்.
அந்த ஆணையத்தினுடைய தீர்ப்பை மீறி யாரும் செயல்பட முடியாது. அதோடு எங்களைப் பொறுத்தவரை ஒரு கருத்துச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சொல்வது, பெங்களூர் மக்கள் குடிநீர் பெறும் தேவைக்காக மேகதாது அணை கட்டுவதாகச் சொல்கிறார்கள். 18 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் எனத் தீர்ப்பு வந்திருக்கிறது. அந்த 18 டிஎம்சி தண்ணீரை பெங்களூர் மக்கள் பெறுவதற்குத் தமிழக மக்களும் எந்த கட்சியும் எதிரானது அல்ல. அந்த தண்ணீரை பெற வேண்டும் என்றால் கிருஷ்ணராஜசாகர் என்ற ஒரு அணை இருக்கிறது. அந்த அணையில் இருந்து அந்த 18 டிஎம்சி தண்ணீரைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம்.
ஒரு அணையானது முன்பே இருக்கும் பொழுது, எதற்காக மேகதாது என்ற அணை கட்ட வேண்டும் என்கிறார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. ஆகவே பெங்களூரு மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தமிழக மக்களும் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பானவர்கள் அல்ல என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன். அதே நேரம் மேகதாது அணை தேவையில்லாத ஒன்று. அதைக் கட்டினால் குடிநீர் என்ற பெயரில், எப்படி கலைஞர் காலத்திலே கர்நாடக அரசு மத்திய அரசினுடைய அனுமதியைக் கூடப் பெறாமல் அன்று மூன்று அணையைக் கட்டி அதன் காரணமாகத் தமிழகம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. தேவையான தண்ணீரைப் பெற முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு புதிய அணை தேவையா. அது தேவையற்ற ஒன்று. அதைக் கட்டினால் மீண்டும் தமிழகம் பாலைவனமாகிவிடும்'' என்றார்.