திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மனாபபுரம் இருந்தபோது நவராத்திரி விழா இங்கு பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வா்மா் காலத்தில் திருவனந்தபுரத்தை தலைநகரமாக மாற்றியதையடுத்து அங்கு நவராத்திரி விழா இன்றுவரை விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது.
பின்னர் குமரி மாவட்டம் தாய் தமிழக்தோடு இணைந்ததையடுத்து அந்த நவராத்திரி விழாவுக்காக பாரம்பரியம் மாறாமல் குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்கிரங்களை திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்ல போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுத்தோறும் நவராத்திரிக்காக சுவாமி விக்கிரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் விக்கிரங்கள் பல்லாக்கில் வைத்து தூக்கி கால்நடையாக சுமந்து பக்தர்கள் திருவனந்தபுரம் கொண்டு செல்கின்றனர். இதற்கான விழா இன்று (புதன்) காலை 8.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் நடந்தது. இந்த விழா ஆண்டு தோறும் இரு மாநில அரசு மரியாதையுடன் இரு மாநில போலிசார் அணி வகுப்புடன் பெரும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த சுவாமி விக்கிரங்கள் திருவனந்தபுரம் செல்லும் 56 கி.மீ தூரமான சாலைகளின் இரு பக்கங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி பக்தர்கள் வரிசையாக நின்று திருக்கன் சார்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். இதனால் அது ஒரு விழா கோலம் பூண்டு இருக்கும்.
இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் இந்த விழாவை எளிமையாக அதுவும் சுவாமி விக்கிரங்களை பக்தா்கள் கால் நடையாக பல்லாக்கில் தூக்கி செல்லாமல் வாகனத்தில் ஏற்றி ஒரே நாளில் திருவனந்தபுரம் அதுவும் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் கொண்டுசெல்ல கேரளா அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு குமரி மாவட்ட நிர்வாகமும் ஒத்துக்கொண்டது.
இந்த நிலையில் இரண்டு அரசுகளும் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றாமல் அழிக்க முயற்சி செய்வதாக பாஜக, இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் அதோடு காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்தினார்கள். அதேபோல் கேரளா அரசை கண்டித்து அங்கு பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினார்கள். இதற்கு கோவில் பக்தர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகியது. இதையடுத்து மீணடும் இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் சுவாமி விக்கிரங்களை பக்தர்கள் கால்நடையாக தூக்கி செல்வது என்றும் நிகழ்ச்சி நடைபெறும் பத்மனாபபுரம் அரண்மனையில் குறிப்பிட்ட அளவு பக்தா்கள் மட்டும் அனுமதிப்பது என்றும் விக்கிரங்கள் செல்லும் வழி நெடுகில் பக்தா்கள் கூட்டமாக நிற்கக்கூடாது என்றும் யானையும் ஊா்வலத்தில் அனுமதியில்லையென்று முடிவு எடுக்கபட்டு அதனடிப்படையில் இந்த ஆண்டு இந்த விழா எளிமையாக நடந்தது.
இதில் கேரளா தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கலந்துகொண்டு மன்னா் உடைவாளை குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணியிடம் கொடுக்க அவா் கேரளா தேவசம் போர்டு மேலாளா் மோகனகுமாரிடம் கொடுத்தார். இதையடுத்து சுவாமி விக்கிரங்கள் கொட்டும் மழையில் ஊா்வலமாக சென்றன.