புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.
பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.
இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.
இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும் இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.
இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.