தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவச் சிலையை இன்று (06/03/2022) மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினர் சிலர் செய்த செயலால் வருந்தினேன். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை தி.மு.க.வினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளைத் திருப்திச் செய்வதற்காக மட்டும் தி.மு.க.வினரை எச்சரிக்கவில்லை, திருந்தாவிட்டால் நடவடிக்கை நிச்சயம். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளவர்களை வாழ்த்துகிறேன். பின்னர், பாராட்டும் வகையில் பணி செய்ய வேண்டும். மேயர் என்பது பதவி அல்ல, அது மக்கள் வழங்கிய பொறுப்பு என சுட்டிக்காட்டியவர் கலைஞர்" என்றார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.