திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர் பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 50 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பியூலா செயல்படுகிறார். இப்பள்ளியில் சில மாணவிகள் பள்ளிக்கு வராமல் இடைநின்றுவிட்ட படியால், தலைமை ஆசிரியர் பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் உதவியை நாடியுள்ளார். பரமசிவன் அம்மாணவர்களின் பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாணவிகளின் பெற்றோரிடம் பேசும்போது, “உங்க யாருக்காவது உதவி வேணும்னா என்னை போலீஸ் ஸ்டேசனில் வந்து பாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்டணும், சாப்பாடு சங்கடமா இருக்கு, வீட்டுக்காரர் சங்கடப்படுத்துகிறார் என என்ன பிரச்சனைகளாக இருந்தாலும் என்னை வந்து பாருங்கள். உங்களுக்காக 24 மணி நேரமும் காவல்நிலையம் திறந்து இருக்கும். ஆனால் எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
பள்ளிகளில் 5 நாட்கள் முட்டை போடுறாங்க, 2 நாள் பயிறு போடுறாங்க. உணவுக்கு பிரச்சனை என்றால் என்னை வந்து பாருங்கள். யார் கை காலில் விழுந்தாவது உங்களுக்கு உதவி செய்கிறேன். என்னை ஏன் படிக்க அனுப்பவில்லை என்று இந்த குழந்தைகளே கேட்பார்கள். தயவு செய்து படிக்க அனுப்புங்கள். மத்திய அரசிடம் ஒரு திட்டம் உள்ளது. 14 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி கொடுக்க வேண்டும் என்ற திட்டமுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் அவர்களது பெற்றோர்கள் தான் குற்றவாளிகள். குழந்தைகள் விசயத்தை விடவேமாட்டேன். தவறு செய்தால் கூட விட்டு விடுவேன். படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். இது குழந்தைக்கு விஷம் கொடுப்பது போல். சமுதாயத்தை கருவறுப்பது போல். தயவு செய்து பள்ளிக்கு அனுப்புங்கள். தவறான மூடநம்பிக்கைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்” எனக் கூறினார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். “குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல்துறையின் பணி அல்ல. நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களின் பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.