கோவை எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விட்ட நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து விசாரித்ததில் தாமதமாக புறப்பட்டதால் குறிப்பட்ட ரயிலை நிறுத்த பொய் சொல்லியது தெரியவந்துள்ளது.
நேற்று காலை 6 மணிக்கு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்து சென்னை டூ கோவை எக்ஸ்பிரசில் வெடிகுண்டு இருப்பதாக இருவர் பேசிக்கொண்டனர் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அந்த மொபைல் நம்பரை போலீசார் கைப்பற்றி அவரை தொடர்பு கொண்டதில் தன் பிறந்தநாள் இன்று எனவே நண்பர்கள் விளையாட்டாக செய்துவிட்டார்கள் மன்னித்துவிடுங்கள் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் அந்த நபர். இதனை அடுத்து போலீசார் அந்த தொலைபேசி எண்ணின் டவரை வைத்து கண்டுபிடித்ததில் அந்த நபர் கோடம்பாக்கத்தை சேர்ந்த நவீன் என்பது தெரியவர வடபழனி போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில், தான் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் என்பதும், நேற்று காலை 6.10 மணிக்கு சென்னை டூ கோவை எக்ஸ்பிரஸில் காட்பாடி செல்ல இருந்தேன். ஆனால் ரூமில் நன்றாக தூங்கிவிட்டதால் தாமதமானது எனவே ரயிலை பிடிக்க முடியாமல் போய்விடும். வெடிகுண்டு இருப்பதாக கூறினால் ரயில் புறப்பட தாமதமாகும் என நினைத்து இவ்வாறு செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறி ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.