சென்னை பட்டினப்பாக்கம் மெரினா கடற்கரைச் சாலையில் சந்திரமோகன் என்பவரும், அவருடன் இருந்த தனலட்சுமி என்ற பெண் ஆகிய இருவரும், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசியிருந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து போலீசாரிடம் அத்துமீறிய இந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கிடையே பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியதாகக் காவலர் சிலம்பரசன் என்பவர் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு இருவரையும் கைது செய்ய போலீசார் தரப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வந்தனர். இத்தகைய சூழலில் தான் இவர்கள் இருவரையும் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் மயிலாப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக போலீசாரால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டபோது, “பிள்ளைகள் முன்பு என்னைக் கைது செய்து அழைத்து வந்துவிட்டீர்களே. இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள். நான் என்ன தவறு செய்தேன். என்னை ஏன் அடித்தீர்கள். நான் வெளியே வந்ததும் ஏதாவது செய்து கொண்டால் காவல்துறையினரே பொறுப்பு” என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை காவல்துறையின் எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "என் பெயர் சந்திரமோகன். நான் வேளச்சேரியில் இருந்து வருகிறேன். நேற்று இரவு 12 மணியளவில் நானும் என்னுடைய தோழியும் பட்டினப்பாக்கம் மெரினா பீச் அருகில் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு வந்த காவலர்கள் அங்கிருந்த அனைவரையும் எழுப்பிக்கொண்டிருந்தனர். அதனால் எனக்குக் கோபம் வந்தது. என் பக்கத்தில் வந்தபோது நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அப்போது தற்செயலாகக் கெட்ட வார்த்தையெல்லாம் பேசிவிட்டேன். ஓவர் போதையில் இருந்ததால் நிதானமாக இல்லை. அதன் பின்னர் அவர்கள் காவல்துறையினர் எனத் தெரிந்ததும் அவர்களை எதோ திட்டிவிட்டு அவர்களிடம் சொல்லாமலே காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். இனி காவல்துறையினரை இதுபோல பேச மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" எனப் பேசியிருக்கிறார்.
சந்திரமோகன் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் தற்பொழுது அவரை போலீசார் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்ய முயன்றபோது தான் போதையில் பேசிவிட்டதாக சந்திரமோகன் புலம்பும் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'போதையில் பேசி விட்டேன்.போதை இறங்கிவிட்டதும் பயம் அதிகமாகி விட்டது. போலீசாரிடம் காவல் நிலையம் வந்து மன்னிப்பு கேட்க நினைத்தேன். ஆனால் போலீசார் அடிப்பார்களோ என பயந்துவிட்டேன். வீட்டுபக்கம் மீடியாக்காரர்கள் வேற வந்து விட்டார்கள். அதனால் பயந்து விட்டேன்' என்றார்.
'அப்படி விரட்டுறியே போலீஸ்னா உனக்கு அவ்வளவு இதுவா போச்சா, ஏதும் பண்ண முடியானுசொல்ற, புடிக்க முடியாதுன்னு சொன்ன' என போலீசார் கேட்க, 'சார் நான் தெரியாம பண்ணிட்டேன் சார். நான் தான் சொல்றேன்ல. என்ன பேசுனேன்னு எனக்கே ஞாபகம் இல்லை. காலையில் வீடியோ பார்த்துதான் எனக்கு ஞாபகம் வந்தது'' என சந்திரமோகன் கூறினார். 'போலீஸ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் நீ புரிகிறதா?' என போலீசார் பேசும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.