நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டு முடித்தது. மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற நேர்காணலில் கன்னியாகுமரி, தர்மபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் முடிந்துள்ளது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,''ஐந்தாவது முறையாக திமுகவின் வெற்றி கூட்டணி தொடர்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என ஐந்தாவது முறையாக கூட்டணி தொடர்கிறது. அனைத்து தொகுதிகளிலும் நிற்கும் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பதை மனதில் வைத்துக்கொண்டு திமுகவினர் பணியாற்ற வேண்டும்.
40க்கு 40 என்ற அளவில் வென்றால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசியல் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு 40க்கு 40 வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும். பத்தாண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கி கொடுத்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள்'' என அறிவுரை கொடுத்துள்ளார்.