தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு முன்பை விட குறைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கரோனா பாதிப்பு என்பது சற்று குறைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.
அதன் பிறகு கோவையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஊரடங்கிற்கு பிறகு கரோனா பரவல் என்பது தமிழகத்தில் குறைந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிபிஇ உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தேன்.
பல்வேறு கரோனா தடுப்பு பணிகளை தொடர்ந்து தமிழக அரசு செய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 4009 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கிறது. கடந்த 10ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான கரோனா பரிசோதனைகளை செய்து கொண்டு வருகிறோம். கரோனா பணிகளில் கோவை புறக்கணிக்கப்படுவதாக சிலர் புகார்களை தெரிவித்து வருகின்றனர். நானும் கேள்விப்பட்டேன். அப்படி சொல்பவர்களுக்கு நான் ஏதோ அரசியல் ரீதியாக பதில் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அரசியல் நோக்கத்தோடு இந்த கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால் தெளிவாக விரிவாக சொல்ல விரும்புவது, நாங்கள் உருவாக்கி வைத்திருக்கக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை அவர்கள் நேராக வந்து பார்வையிட வேண்டும். நேரில் பார்வையிட்டால் இந்த விமர்சனத்தை வைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
அதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். எந்த பாரபட்சமும் பார்க்கமாட்டோம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தேர்தலில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில் நான் என்னுடைய தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டு கலைஞருடைய நினைவிடத்திற்கு சென்றேன். நினைவிடத்தில் மரியாதை செய்து விட்டு வெளியே வரும்போது பத்திரிகையாளர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். ஆட்சி அமைக்க போகிறீர்கள் ஏதாவது கருத்து சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். அப்போது நான் சொன்னேன், எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையிலே எங்கள் பணிகள் இருக்கும். அதேபோல் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருந்தும் அளவிற்கு எங்கள் பணி அமையும் என்று தெளிவாக அன்றே நான் சொன்னதைதான் இன்றும் சொல்கிறேன். எந்த பாரபட்சமும் நிச்சயமாக காட்ட மாட்டோம்'' என்றார்.