அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிக மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக வரும் பொதுமக்களை மருத்துவர்கள் அலைகழிப்பதும், துப்புரவு தொழிலாளர்களை மருத்துவம் பார்க்க சொல்லுவதும், வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி விபத்துக்குள்ளான பெண் ஒருவருக்கு தையல் போடும் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக பெருமை பேசிவருகிறார் அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர்.ஆனால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், போதிய டாக்டர்கள் நர்சுகள் இல்லை என்றும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் மருத்துவ வசதி பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையே இருக்கிறது.
இந்தநிலையில் 1.3.2019 மன்னார்குடி அடுத்துள்ள உள்ளிக்கோட்டை மருத்துவமனைக்கு வந்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் 1,800 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இனி தமிழகத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்காது, சிறப்பான மருத்துவம் வழங்கப்படும். மக்கள் அவதிப்பட மாட்டார்கள். என கலர் கலராக ரிகல் விட்டார். ஆனால் அவர்கூறியது முழுக்க முழுக்க பொய் என்பதை நிறுபித்திருக்கிறது கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள சம்பவம்.
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை நம்பி சுமார் 18 கிராமங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நகராட்சி மருத்துவமனையாக இருந்து தற்போது தாலுக்கா மருத்துவமனையாக உயர்வு பெற்றுள்ளது. ஒன்பது டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் ஒன்பது மணிக்கு வந்து பன்னிரண்டு மணிக்குள் சொந்த மருத்துவமனைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு காயத்தோடு ஒரு பெண் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அங்கு டாக்டர்கள் இல்லை. பணியில் இருந்த நர்ஸீம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெண் துப்புரவு பணியாளரை சைகையில் காட்டி அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து துப்புரவு பணியாளர் காயம் அடைந்த பெண்ணை படுக்க வைத்து தலையில் காயம்பட்ட இடத்தில் தையல் போட்டு மருந்து போடுகிறார். எம்.எஸ் படித்த டாக்டர் போல துப்புரவு பணியாளர் தையல் போட்ட அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்காததால், தையல் போட்ட சமயத்தில் வலியால் துடிதுடித்து போனார். ஆனாலும் துப்புரவு பணியாளர் அசரவில்லை. துணிந்து கோணிப்பையை தைப்பது போல தைத்து முடித்து அந்த இடத்தில் மருந்து போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்.