ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது வெள்ளாளப்பாளையம். அங்கு வசிக்கும் விவசாயி சரவணபவனின் மகன் கவிஅரவிந்த் பட்டதாரி வாலிபர். அதேபோல் அருகே உள்ள கிராமமான எறங்கட்டூரில் வசிக்கும் விவசாயி செல்வகுமாரின் மகள் பிரவீனா. கவிஅரவிந்திற்கும் பிரவீனாவிற்கும் நிச்சயம் செய்யப்பட்டு இன்று காலை பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு வழக்கமாக மணமக்கள் காரில் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த புதுமண தம்பதிகளை முதலில் மணமகன் வீட்டுற்கும், பிறகு மணமகள் வீட்டிற்கும் மாட்டு வண்டியில் அழைத்து சென்றனர். நாட்டு மாடுகளை வைத்து வண்டி பூட்டி ஊர்வலமாக சென்றனர். மணமக்கள் வண்டி முன் செல்ல உறவினர்கள் மேலும் எட்டு மாட்டு வண்டிகளில் தொடர்ந்து சென்றனர். மணமக்களின் இந்த மாட்டு வண்டி ஊர்வலம் கோபி பகுதி பெருமக்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுபற்றி இரு குடும்பத்தினரும் கூறும்பொழுது, நமது பாரம்பரிய முறைப்படி பண்பாடு கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் நவீன மேற்கத்திய கலாச்சாரத்திற்கு நாம் ஆட்பட்டுவிட்டோம். ஆகவே பண்பாட்டை வலியுறுத்தி இந்த இளைய சமுதாயம் நமது பாரம்பரிய முறைகளை அறிந்துகொள்ள வேண்டும் அதனை வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும். இதற்காகத்தான் முந்திய காலத்தில் நாம் பின்பற்றிய வழக்கத்தை எங்கள் வீட்டு திருமணத்தில் செய்தோம் என்றார்கள்.