Skip to main content

ஆளுநரிடம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கொடுத்த கடிதம்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018


 

cognizent

 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 1-4-2018 அன்று நடைபெற்ற “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்” காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்  ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததையும், மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்பதையும் கண்டித்தும், உடனடியாக நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரமுள்ள ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கக் கோரியும், காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் - அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கெடுத்து, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி, “காவிரி உரிமை மீட்புப் பயணம்” மேற்கொள்வது” என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஏப்ரல் 7- அன்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் திருச்சி முக்கொம்பில் தொடங்கி ஏப்ரல்-12 அன்று கடலூரில் நிறைவடைந்த “காவிரி உரிமை மீட்பு பேரணி”யை தொடர்ந்து இன்று (13-4-2018) நண்பகல் 12.30 மணி அளவில்  கிண்டி, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அவர்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள்  நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர்.


அக்கடிதத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:-


மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு

வணக்கம்,

 
திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தைகள் கட்சி,  மனித நேய மக்கள் கட்சி,  விவசாய சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் - எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழக மக்களின் சார்பாக “2007-ஆம் வருட காவிரி சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்: 2453, 2454 மற்றும் 2456-ன்” கீழ் உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பினை உடனடியாக நிறைவேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தக்க நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை மனுவினை அளிக்கிறோம்.

 

பல ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி நீர் தாவாவை முடிவுக்கு கொண்டு வரவும், நிரந்தர தீர்வு காணவும் 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பாணைக்கு (Decree) இணையான இறுதி தீர்ப்பை செயல்படுத்த ஆறு வார காலத்திற்குள் ஒரு செயல் திட்டத்தை (Scheme) வகுக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கட்டளை பிறப்பித்தது மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் உடனடி பார்வைக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அந்த வாசகங்களை அப்படியே கீழே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

“உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கும், சம்பந்தப்பட்ட நதிநீர் தாவா மாநிலங்களுக்கு எங்கள் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கிடைப்பதற்கும் ஏதுவாக இன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் ஒரு செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் கட்டளையிடுகிறோம். அப்படிக்கூறும் போது தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத அடிப்படையிலான தண்ணீர் முறைப்படி திறக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான காலக்கெடு எந்த காரணத்தின் அடிப்படையிலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்” (பத்தி 403- பக்கம் 457)

 

மேற்கண்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வெளிப்படையான தெளிவான அர்த்தத்தின் மூலம் கீழ்கண்ட மூன்று விஷயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால்:

a)     செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

b)     அந்த செயல் திட்டம் ஆறு வாரங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

c)     எந்த காரணத்திற்காகவும் ஆறு வாரத்திற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது.

செயல்திட்டம் (Scheme) என்ற வார்த்தையின் அர்த்தம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் “ஆணையம்” என்பது மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் 1956-ன் பிரிவு 6A(2)ன் கீழ் தெளிவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் ஆகிய மூன்றையும் ஒரு சேரப்படித்துப் பார்த்தாலே மத்திய அரசு உருவாக்க வேண்டிய செயல் திட்டம் என்ன என்பது குறித்து எவ்வித சந்தேகமும் எழுவதற்கு நிச்சயமாக வாய்ப்பு துளியும் இல்லை. இருந்த போதிலும் “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை” என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கே தவறான அர்த்தம் கற்பிக்கும் வகையில் மத்திய நீர் பாசானத்துறை அமைச்சர் 27.2.2018 அன்று இந்து ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி திரித்து கருத்து வெளியிட்டு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் நிலைப்பாட்டை மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் எடுத்தார். “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இல்லை” என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் பேட்டியளித்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை செயலாளரின் பேட்டிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை  அவமதிக்கும் உள்நோக்கம் நிறைந்தது மட்டுமின்றி, அப்படிப் பேட்டியளித்து தங்களின் அலுவலக கடமையிலிருந்தும் அவர்கள் தவறினார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள வாசகங்களை கீழ்கண்டவாறு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

“நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் அமைப்பு- (அதாவது காவிரி மேலாண்மை வாரியம்):

 

“இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அமைப்பு பற்றியும் நடுவர் மன்றம் கூறியிருக்கிறது, அவ்வாறு கூறும் போது 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் மத்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பிற்கு “செயல் திட்டம்” (ஸ்கீம்) ஒன்றை உருவாக்குவதற்கு அதிகாரம் அளித்து 1980 ஆம் வருட சட்ட திருத்தத்தின் மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 6A-ன் சாரம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு அந்த தீர்ப்புக்கு “தீர்ப்பாணை” (டிகிரி) அந்தஸ்துப் பெறுகிறது என்ற பிரிவு 6 சுட்டிக்காட்டியிருப்பதையும் நடுவர் மன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த “ஸ்கீம்” உருவாக்குங்கள் என்று உத்தரவிடுவது மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் அடிப்படையில் முரண்பட்ட அம்சமாக இருக்கும் என்று நடுவர் மன்றம் எண்ணியது. அதனால் 1980 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நதி நீர் தாவா சட்டம் இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்ட நடுவர் மன்றம், அப்படியொரு அமைப்பு உருவாக்க பரிந்துரைக்கும் அதிகாரம் நடுவர் மன்றத்திற்கு இருக்கிறது என்று முடிவு செய்தது. ஆகவே பக்ரா பீஸ் மேலாண்மை வாரியம் போன்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரைத்தது. பொருத்தமான அமைப்பு ஒன்றை உருவாக்கவில்லை என்றால் இறுதி தீர்ப்பை ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய முடியாது என்று நடுவர் மன்றம் எண்ணியது. இறுதி தீர்ப்பின்படி பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அணைகளின் இயக்கத்தையும், தண்ணீர் திறந்து விடுவதை முறைப்படுத்தும் மேற்பார்வை அதிகாரத்தையும் காவிரி மேலாண்மை வாரியம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே காவிரி மேலாண்மை வாரியத்தால் அமைக்கப்படும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அந்த பணிகளுக்கு துணையாக இருக்கும் என்றெல்லாம் சுட்டிக்காட்டி இறுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் பரிந்துரைத்து, அந்த வாரியத்தின் உறுப்பினர்கள், பணிகள் உள்ளிட்டவை பற்றி நடுவர் மன்றம் பரிந்துரை செய்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினர்களாக யார் யார் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து அதன் பணிகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது” (பத்தி 290. பக்கம் 336)

 

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பில் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அமைப்பு உருவாக்குது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டி தனது தீர்ப்பில் முழுமையாக விளக்கியிருக்கிறது.  இவ்வளவு தெளிவாக இருந்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு தவறான அர்த்தம் கற்பிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இது தவிர நதி நீர் தாவாவிற்கு உட்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “ஸ்கீம்” பற்றி கருத்துக் கேட்டார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீது இப்படியொரு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவதற்கு மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு நிச்சயம் அதிகாரம் இல்லை என்பதே எங்கள் கருத்து. ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் கடமையை தட்டிக் கழிக்கவே மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற எண்ணத்திற்குத்தான் எங்களால் வர முடிகிறது. உச்சநீதிமன்றத்தின் ஆறு வாரக் காலக்கெடு முடியும் வரை காத்திருந்து விட்டு மத்திய அரசு “விளக்கம்” கேட்டது எங்களுக்கு ஏமாற்றமாகவும் பெரும் கவலையளிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. தமிழக மக்களின் குடிநீர் ஆதாரங்களும், லட்சக்கணக்கான விவசாயிகளின் விவசாயமும் ஈடு கட்ட முடியாத இழப்பிற்கு உள்ளாகும் என்று நன்கு தெரிந்திருந்தும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக மட்டுமே ஒரு மத்திய அரசே இப்படி செயல்பட வேண்டுமா?

 

மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதாலும், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்படியான தீர்ப்பை அமல்படுத்தும் நோக்கம் மத்திய அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படவில்லை என்பதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக மாநில அரசே அனைத்துக் கட்சி கூட்டத்தை 22.2.2018 அன்று கூட்டியது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கூடி காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலக்கெடுவிற்குள் அமைப்பது பற்றி வலியுறுத்தவும், மாநிலத்தில் உள்ள சூழ்நிலைகளை விளக்கிடவும் மாண்புமிகு பிரதமரை சந்திப்பது உள்ளிட்ட மூன்று முக்கியத் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால்   அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்கவோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் அவமதிக்கும் விதத்திலும் பேசி வருவதை கண்டிக்கவோ துரதிருஷ்டவசமாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் முன்வரவும் இல்லை. ஆர்வமும் காட்டவில்லை. 

 

இது மட்டுமின்றி “காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 15.3.2018 அன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழரை கோடி மக்களின் விருப்பங்களையும், உணர்வுகளையும் அந்த தீர்மானம் வெளிப்படுத்துகிறது என்று நாங்கள் தீர்மானமாக நம்புகிறோம். எங்களது முயற்சிகள் அனைத்தும் உதாசீனப்படுத்தப்பட்டதோடு மட்டுமின்றி, நாங்கள் வைத்த கோரிக்கைகளும் மத்திய அரசின் காதுகளில் விழவில்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு கடைமைப்பட்டு இருக்கிறது என்பது மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குத் தெரியும். அதனால் காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் விதத்தில் அதிமுக அரசு அடிபணிந்து கிடக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும், அதன்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதியில்லாமல் மாநில அரசு தத்தளித்து நிற்கிறது. ஊழலில் திளைக்கும் இந்த அதிமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறது. ஆகவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு உறுதியுடன் அழுத்தம் கொடுக்கும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள்.

 

இந்நிலையில் ஆறுவாரத்திற்குள் “ஸ்கீம்” உருவாக்காமல், கடைசி நேரத்தில் “விளக்கம்” கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. பாராமுகத்துடன் இருக்கும் மத்திய அரசு, செயலற்ற மாநில அரசு, வதைக்கும் கடுமையான வறட்சி போன்றவற்றால் ஏற்கனவே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசு காட்டி வரும் அசாதரணமான தாமதம் மற்றும் அநியாயமான செயல்பாடுகள் தகர்த்து விட்டது. மத்திய- மாநில அரசுகளின் கூட்டுத் தோல்வியால் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தொடர்ந்து ஆறு வருடங்களாக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி நீர்பாசனத்திற்காக திறக்கப்படவில்லை. இப்போதைய இதே நிலை நீடித்தால் இந்த வருடமும் அதே நிலை ஏற்பட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகி விடும் என்பது மட்டுமல்ல- விவசாயத்தை கைவிட்டு மக்கள் வேறு தொழில்களை நாட வேண்டிய நெருக்கடி உருவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புத் தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலைமை ஏற்படும். இதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், கடையடைப்புகள், சாலை மறியல்கள் நடத்தி தங்களது கோபத்தையும், ஆத்திரத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மேலும் மூன்று மாத காலம் மத்திய அரசு அவகாசம் கேட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களை திகைக்க வைத்திருக்கிறது. ஆகவே  உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை மத்திய அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறதே தவிர, நான்கு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாவிற்கு அளிக்கப்பட்ட சட்டபூர்வமான தீர்வை நிறைவேற்ற முன்வரவில்லை என்பது புரிகிறது.

 

தமிழ்நாட்டின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். கடையடைப்பிற்கு முன்னோட்டமாக 1.4.2018 அன்று தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் சாலை மறியல் நடத்தப்பட்டது. 5.4.2018 அன்று அறிவிக்கப்பட்ட முழு அடைப்பிற்கு தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஏகோபித்த ஆதரவு கிடைத்து அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுடன் காவிரி உரிமை மீட்பு பயணம் 7.4.2018 அன்று திருச்சியில் துவங்கி, மகத்தான வெற்றி பெற்று இன்றைக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்திப்பதுடன் நிறைவு பெறுகிறது. ஆனால் சட்டபூர்வமான காவிரி உரிமைகளுக்கான எங்களது அமைதியான அறவழிப் போராட்டம் இத்துடன் நின்று விடாது- தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை இதே பேரார்வத்துடன் அந்த போராட்டம் தொடரும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆகவே மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குள்ள அரசியல் சட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவித்து, 3.5.2018-க்கு முன்பாகவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும், “ஸ்கீம்” என்றால் என்ன என்று “விளக்கம்” கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவினை உடனே திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மேலும் தாமதிப்பது தமிழ்நாட்டு மக்களின் நலனை மிக மோசமாக பாதிக்கும் என்றும், தற்போது நடைபெற்று வரும் ஜனநாயக ரீதியியான அறவழிப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் உடனடியாக  செயல்படுத்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விரைந்தும், தீவிரமாகவும் தலையிட வேண்டும் எனவும், இந்த மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் இதனடியில் கையொப்பமிட்டுள்ள தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

சார்ந்த செய்திகள்