உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் கட்சிக்காரர்களுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்கி வந்தார். அதோடு துறை ரிதீயான ஆய்வுக் கூட்டத்திற்கும் சென்னைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, மற்றும் மாநில திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், மேயர்கள், உட்பட பலர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
அதோடு அமைச்சர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற விஷயம் மாவட்டம் முழுவதும் பரவ ஆரம்பிக்கவே கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் மருத்துவமனைக்கு சென்று அமைச்சரின் உடல்நலத்தை விசாரிக்க ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவ சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதோடு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் சிலர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் நலமாக இருப்பதாகவும் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் இருக்க தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதை தவிர்க்கவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் அனைவரையும் சந்திப்பதாக” அமைச்சர் ஐ.பெரியசாமி தனது அறிக்கை மூலமாக தெரிவித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யாரும் மருத்துவமனைக்கு சென்று அமைச்சரை பார்க்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தி உள்ளது.