சென்னை ஆர்.ஏ. புரத்தில் முத்தமிழ்ப் பேரவை இசை விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கிய பின்னர் பேசிய தமிழக முதல்வர், ''ஆண்டுதோறும் கலைஞரை அழைத்து இந்த விழாவை நடத்துவதுண்டு. கலைஞரின் மறைவுக்குப் பிறகு ஆண்டு தோறும் என்னை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துகின்றனர். இயக்குநர் அமிர்தம் நிகழ்ச்சிக்கு தேதி கேட்கிறார்களோ இல்லையோ நானே ஆண்டுக்கு ஒரு தேதியை தருவது என்று முடிவெடுத்து அதைக் குறித்து வைத்துக் கொள்வேன். ஏனென்றால் இயக்குநர் அமிர்தம் இடத்தில் எனக்கு எப்பொழுதும் ஒரு பயம் உண்டு. நான் பல நேரங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறேன். அப்பா இடத்தில் கூட அடி வாங்கியதில்லை; ஆனால் அவரிடத்தில் நான் அடி வாங்கி இருக்கிறேன். ஸ்கூல் கட் செய்துவிட்டு சினிமா போனதற்கு அடி வாங்கியிருக்கிறேன். சின்ன வயசில். என்றும் நான் மறக்கமாட்டேன். அந்த அளவிற்கு என்னை கண்டிப்பாக வளர்த்தவர் இயக்குநர் அமிர்தம்.
இந்த விருதைப் பெற்றது எப்படி உங்களுக்கு பெருமையோ, அதேபோல கொடுத்தது எனக்கும் பெருமையாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். கலைஞர் நூற்றாண்டு விழா இது. இந்த ஆண்டு முதல் கலைஞர் பெயரால் ஒரு விருதை முத்தமிழ்ப் பேரவை வழங்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இயல், இசை, நாடகத்தைக் காப்பாற்றுவது என்பது தமிழைக் காப்பாற்றுவது; தமிழினத்தைக் காப்பாற்றுவது. சிலர் தமிழ் முகமூடி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றி விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடும் கணக்கெல்லாம் தப்பு கணக்கு தான். அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள். இதுபோன்ற ஏராளமான இசை விழாக்கள் இலக்கிய விழாக்கள் நடக்க வேண்டும்'' என்றார்.