இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி (27.01.2024) அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில், இன்று சென்னை திரும்பியுள்ளார். இதற்கு முன்பே ஸ்பெயினில் இருந்து காணொளி மூலமாக கூட்டணி தொகுதிப் பங்கீடு, ஆளுநர் உரையுடன் கூடிய பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை நடத்தி இருந்தார்.
தற்போது முதல்வர் தமிழகம் திரும்பியுள்ளதால் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் திரும்பியதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பொழுது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வரை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் அதிகாரப்பூர்வமாக எந்த பேச்சுவார்த்தை குறித்தும் தகவல்களை வெளியிடாத நிலையில், மறைமுகமாக அவர்கள் இரண்டு எம்பி சீட்டுகளை கேட்டுள்ளதாகத் தகவல்கள் ஒருபுறம் வெளியாகி உள்ளன. கோவை மற்றும் தென்சென்னை ஆகிய தொகுதிகளைக் கேட்டிருப்பதாகவும் ஆனால் ஒரு தொகுதியை மட்டும் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.