கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது ஒலையனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (22). லாரி டிரைவரான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாச்சியார் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது எழில் செல்வி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. கணவன், மனைவி இருவரும் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள கந்தசாமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்தார்கள். ஐயப்பனின் மனைவி எழில்செல்வி அடிக்கடி செல்ஃபோனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இதுகுறித்து சந்தேகம் அடைந்த ஐயப்பன், தன் மனைவியிடம் “யாரிடம் அதிக நேரம் செல்போனில் பேசுகிறாய்” என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (04.06.2021) காலை ஒரு ஆட்டோவில் தனது மனைவி எழில் செல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். மயங்கிய நிலையில் ஒரு ஆட்டோவில் கொண்டு சென்று உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். எழில் செல்வியை மருத்துவமனைக்கு கொண்டுவந்ததும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து பல மணி நேரம் ஆனதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் ரகசியமாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசாருக்கு, எழில்செல்வி மரணம் குறித்து அவரது கணவர் ஐயப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐயப்பனை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் ஐயப்பனிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் தன் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஐயப்பன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் ஐயப்பன், “கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் எனது மனைவி எழில்செல்வி வேறு யாருடனோ செல்ஃபோனில் நீண்ட நேரம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து எங்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அடிக்கடி ‘யாரிடம் செல்ஃபோனில் பேசுகிறாய்’ என்று என் மனைவியிடம் கேட்டபோது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் எழில்செல்வியின் கழுத்தை இறுக்கியபோது அவர் மயங்கி விழுந்தார். பதறிப்போன நான் விடியற்காலை 4:00 மணி அளவில் நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். ஆனால் குழந்தையைக் காப்பாற்றும் எண்ணத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டேன். அதைத் தொடர்ந்து காலை ஒரு நண்பரின் ஆட்டோவை வரச்சொல்லி எழில்செல்வியை அதில் ஏற்றிக்கொண்டு அவர் சீரியஸான நிலையில் உள்ளதாகக் கூறி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
மனைவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறினார்கள். இதனால் நம் மீது சந்தேகம் வருமோ என்று நான் குழப்பமான மனநிலையில், இருந்தபோது அங்கு வந்த போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு சரி செய்தனர். அப்போது நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்” என்று ஐயப்பன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து எழில்செல்வியின் உடலை அதே குருந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து எழில்செல்வியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெறித்து அவரது கணவரே கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.