தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 46 வது பிறந்தநாள் திமுகவினர் மத்தியில் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ‘குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை முதல்வருக்கு வழங்கினார்.
தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி.சண்முகம், தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிலையில் காரில் ஏறிய உதயநிதியை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'முதலில் நடிகர், பின்னர் எம்.எல்.ஏ இப்போது அமைச்சராக இருக்கீங்க இந்த பிறந்தநாளை எப்படி பாக்குறீங்க?' என்ற கேள்விக்கு, ''எல்லா பிறந்தநாளை போன்றுதான் இந்த பிறந்தநாளும். இந்த பிறந்த நாளில் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு. காலையில் இருந்து தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை முதல்வர் திறந்து வைத்துள்ளார்'' என்றார்.
'உங்கள் பிறந்த நாளில் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ''டிசம்பர் 17 சேலத்தில் நடக்கும் மாநாட்டை வெற்றியடைய செய்ய வேண்டும். அந்த பொறுப்பை முதல்வர் இளைஞரணிக்கு கொடுத்துள்ளார்'' என்றார்.
'சார் உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் சிலர் சொல்கிறார்களே' என்ற கேள்விக்கு, 'எந்த தொண்டர் சொன்னாங்க' என்றார். போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்காங்க, என செய்தியாளர் சொல்ல ''எங்க ஒட்டியிருக்காங்க'' என உதயநிதி கேட்க, அண்ணா அறிவாலயம் முன்பே ஒட்டியிருக்காங்க என செய்தியாளர் சொன்னார். அதற்கு ''நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன். எனக்கு விருப்பம் இல்லை'' என்றார்.