மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, “எனக்கு குடிப்பழக்கமே இல்லையே… போங்க சார்.. உங்க மிஷின் தப்பு சார்… நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ப்ளட் டெஸ்ட் எடுங்க..” என போலீஸ்காரரிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவானது சென்னை தேனாம்பேட்டையில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் இரவு ரோந்துப் பணியில் இருந்த சட்டம்-ஒழுங்கு எஸ்.ஐ. இளங்கோவன், ஒரு காரை தணிக்கை செய்யும்போது அதனை ஓட்டி வந்த தீபக்கை, பிரீத் அனலைசர் கருவியை வைத்து ஊதச் செய்திருக்கிறார். அப்போது 45 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகக் காட்டியது. தீபக்கோ, மதுப்பழக்கமே எனக்கு கிடையாது என வாக்குவாதம் செய்தார். வேண்டுமானால் என்னை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பரிசோதனை செய்யுங்கள். அப்போது, எனது ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதாகக் காட்டினால் நான் சம்மதிக்கிறேன் என்கிறார்.
எஸ்.ஐ. இளங்கோவனோ, வழக்கு போடுவது மட்டுமே எங்கள் வேலை, நான் தவறு செய்யவில்லை என்பதை நீங்களே நிரூபியுங்கள் என எதிர்வாதம் செய்கிறார். இதையடுத்து, வேறு ஒரு பிரீத் அனலைசர் கருவி மூலம் 2 முறை சோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஜீரோ பெர்சன்டேஜ் காட்டியது. இதனால், வழக்கு பதிவு செய்யாமல் அவரை அனுப்பி வைத்துவிட்டனர் போலீசார். இதனிடையே, தீபக்குடன் வந்த நண்பர் இந்த வாக்குவாதத்தை செல்போனில் பதிவு செய்து ஊடகங்களுக்கு கொடுத்ததால் பழுதான கருவியை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்வதாக செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறை உதவியுடன் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்து வருகிறோம். ஆனால் இதுவரை யாரும் எங்களுக்கு இப்படி ஒரு புகார் அளித்ததில்லை. நாங்கள் சோதனை செய்யும் கருவிகள் அனைத்தும் நல்ல பராமரிப்பில் இருக்கிறது. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அதிகாரிகள் முன்கூட்டியே அவைகளைச் சரிபார்த்த பின்பே உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். 383 கருவிகள் எங்களிடம் உள்ளது. இவையனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. ஒரு கருவியின் விலை 40 ஆயிரம் ரூபாய் ஆகும். பொது மக்களுக்கு சிறிது நேரம் சிரமம் இருந்தாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவது முக்கியம்” எனக் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரரைத் தொடர்பு கொண்டோம்.
“நாங்கள் சோதனையில் ஈடுபடும்போது, எல்லோருக்கும் பிரீத் அனலைசர் கருவியைப் பயன்படுத்தமாட்டோம். குடித்துவிட்டு வருபவர்கள், நம்மைக் கண்டாலே தப்பிச் செல்வதற்குத்தான் பார்ப்பார்கள். ஒரு சிலர் வாயை ஊதமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். நாங்கள் அருகே சென்று பேச்சுக் கொடுப்போம். அப்போது, மது வாடை அடித்துவிடும். அப்படியான நபர்களுக்குத்தான் ப்ரீத் அனலைசர் கொண்டு சோதனை நடத்துவோம்.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட காரை நிறுத்தினோம். கார் டோரை திறந்ததுமே மது வாடை அடித்தது. அந்தக் காரில் மேலும் 2 பேர் இருந்தனர். ஒருவேளை அவர்கள் குடித்திருந்திருக்கலாம். ஏசி கார் என்பதால், அந்த ஸ்மெல் வெளியே வந்திருக்கலாம். அதனால், 45 பர்சன்ட் கருவியில் காட்டி இருக்கலாம். அவங்க கூட இருந்தவர் நான் ஆர்கியூ பண்றதை வீடியோ பதிவு செய்தார். நாங்களும் எங்க தரப்புக்காக வீடியோ பதிவு செய்து வைத்திருக்கிறோம். இதில் எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை” எனத் தெரிவித்தார்.
‘பக்கத்தில் இருந்தவர் குடித்திருந்தாலும், ப்ரீத் அனலைசர் கருவி இப்படி காட்டுமா?’ என நமக்குத் தெரிந்த போக்குவரத்து காவலர் ஒருவரிடம் கேட்டோம். “அப்படி எல்லாம் நடக்காது சார்… நல்லா வாயை வச்சு 2 அல்லது 3 முறை ஊதினால்தான் எவ்வளவு ஆல்கஹால் கன்டென்ட் இருக்கு என்பதைக் காட்டும். 10 நிமிடத்திற்கு முன்னாடி குடித்திருந்தார் என்றால் 100 அல்லது 150 பெர்சன்டேஜ் காட்டும். 3 மணி நேரத்திற்கு முன்னாடி குடித்திருந்தால், அளவு குறைவாகக் காட்டும். அதாவது 50 அல்லது 60 பெர்சன்டேஜ் காட்டும். 40 பெர்சன்டேஜுக்கு மேல வந்தால் கேஸ் போடுவோம். 10 மணிநேரத்திற்கு முன்னாடி குடித்திருந்தால் 5 அல்லது 10 பெர்சன்ட் காட்டும். அவர்களும் சார். நான் நேற்று குடித்தேன் என்று உண்மையை ஒத்துக் கொள்வார்கள். நீங்கள் சொன்னது மாதிரி பக்கத்தில் இருந்தவன் குடித்திருந்தால் கருவியில் பதிவாகாது.” என்றார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை அதி நவீன கருவி மூலம் கண்காணிக்கிறோம். 6 மணி நேரத்திற்கு முன்பு அல்லது நேற்றைய தினம் மது அருந்தி இருந்தால் கூட இயந்திரம் மூலம் கண்டுபிடித்து விடலாம். மூன்று மாதங்களுக்கு முன் வாங்கிய இயந்திரத்தைத்தான் காவல்துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். புகார் மீது விசாரணை நடத்தப்படும். இயந்திரத்தில் தவறு இருந்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
காவல்துறை நல்லபடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.