புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி கவர்னர் மாளிகையில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணிவரை பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கிரண்பேடியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி எழுதியுள்ள பிறந்தநாள் கடிதத்தில், ‘தனது 70-ஆவது பிறந்தநாளை புதுச்சேரிக்கு அர்ப்பணித்துள்ளேன். புதுச்சேரியை பசுமையாக மாற்ற, தானும் கவர்னர் மாளிகை குழுவும் தொடர்ந்து பயணிக்க உள்ளோம். பசுமை புதுச்சேரி ஆக மாற்ற நீர் நிலை மிகுந்த இடங்களான குளம், குட்டைகள் ஏரிகள் போன்ற இடங்களில் மரங்களை நட வேண்டும். பொது இடங்களான காடு, பூங்கா, கல்வி நிறுவனம், வழிபாட்டுத் தலம் என அனைத்து இடங்களிலும் மரங்களை நடலாம்.
ஒவ்வொரு வார இறுதியிலும், ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு, மரக்கன்றுகளை நட கவர்னர் மாளிகை குழு செயல்படும். இடங்கள் ஒவ்வொரு வார ஆய்வின் முன்பே, தெரிவிக்கப்படும். இப்பணியில் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். 2016-ஆம் ஆண்டு வளமான புதுச்சேரி, 2017-ஆம் ஆண்டு துாய்மையான புதுச்சேரி, 2018 நீர் ஆதாரங்கள் மிகுந்த புதுச்சேரி என்று நோக்கத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2019-ஆம் ஆண்டு ‘பசுமையான புதுச்சேரி’ எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கை இதைவிட வேறு வழியில் நல்ல காரியங்களுக்கான முறையில் செயல்பட முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.