விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசுகையில், ''எப்போதுமே தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வந்தால் வரலாற்றுப்பூர்வமாக பார்த்தால் ஆளுங்கட்சிக்கு சார்பான ரிசல்ட் தான் வரும். அதில் யார் போட்டியிட்டாலும், எவ்வளவு வேலை செய்தாலும் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் வரும். ஒருவேளை அதை மனதில் வைத்துக்கொண்டு அதிமுக இப்படி அறிவித்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்து ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதை நாம் ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வாக எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆகச்சிறந்த, தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய கட்சியான அதிமுகவே தேர்தலை புறக்கணிப்பதில் எனக்கு ஏற்ப அல்ல. தொண்டர்கள் மட்டுமல்ல என்னைப் போன்ற ஜெயலலிதா விசுவாசிகளுக்கு இது வருத்தமாக தான் இருக்கிறது. இதை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் கருத்து. அதிமுக ஒதுங்கிப்போவதன் மூலமாக பாஜக மட்டும் தான் திமுகவிற்கு எதிரான ஒரு கட்சி எனும் ஒரு பிம்பம் உருவாகிறது. திமுக இடத்தில் அதை அதிமுக எதிர்க்க வேண்டும் அப்பொழுது தான் அது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய அதிமுகவாக இருக்கும். அவர்கள் ஒதுங்கி போவது, பாஜக தான் பிரதான எதிர்க்கட்சி நாங்கள் மூன்றாவது இடத்திற்கு வந்துட்டோம் என அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல உள்ளது. இதையெல்லாம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை'' என்றார்.