புதுச்சேரி துணை நிலை ஆளுநர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இந்தியா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தமிழிசை, அது அரசியல் அதற்கு என்னால் பதில் அளிக்க முடியாது. என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “பிரதமர் நரேந்திர மோடி மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நிலவு வரை சாதனை சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எந்தச் சாதனையும் இல்லை என்று சொல்வதை எப்படி ஒப்புக்கொள்வது. இவர்கள் (திமுக) சூரியனை சின்னமாகத் தான் வைத்துள்ளனர். ஆனால், நமது விண்கலம் ஆதித்யா எல்1 சூரியனை நோக்கிச் செல்ல இருக்கிறது.
கொரோனாவில் இருந்து மீண்டு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதல் நாடாக இந்தியா உள்ளது. இதுவரை எந்த நாடும் அடையாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி. அளவு 8ஐ நெருங்கும் அளவில் நமது ஜி.டி.பி. தற்போது 7.8 என உள்ளது.
இதுவரை இல்லாத சர்வாதிகாரம் இன்று இந்தியாவில் இருக்கிறது என முதலமைச்சர் சொல்லியுள்ளார். இதனை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அவசரக் காலத்தில் இல்லாத சர்வாதிகாரமா? அவசரக் காலத்தில் அவர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களை போன்றோரும் பாதிக்கப்பட்டனர். அப்போது அவரும் சிறையில் இருந்தார். என் தந்தையும் சிறையில் இருந்தார். அப்படியான சர்வாதிகாரம் இருந்தது.
மொழியை வைத்து பெரிய அரசியல் செய்துகொண்டிருந்தனர். இன்று அனைவருடனும் இருந்தனர். அவர்கள் பேசியதெல்லாம் இவர்களுக்கு புரிந்ததா? அல்லது இவர்கள் பேசியது அவர்களுக்கு புரிந்ததா? இதுவெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது. இதனால் செலவுகள் பெரும் அளவு குறையும். மேலும், மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.