உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 க்கான முன்னோட்ட அறிமுக விழாவின்போது அடுத்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான இலச்சினையை நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த இருக்கின்ற மாபெரும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் பிரம்மாண்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024 ஜனவரி மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப்படவுள்ளது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறப்பான முன்னெடுப்பைச் செய்துள்ள தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைப்புக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டுப் பெரு நிகழ்வுக்கான இலச்சினையை உலகுக்கு அறிமுகப்படுத்தவும், முன்னோட்ட அறிமுக விழாவை நடத்தவும், நாம் இங்கே கூடியுள்ளோம்.
கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் தமிழ்நாட்டினுடைய தொழில்துறை மாபெரும் புரட்சியை அடைந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேடியும், நாடியும் வந்தது. இன்றைய தினம் சென்னையைச் சுற்றி காஞ்சிபுரத்துக்கோ, சோழிங்கநல்லூருக்கோ, ஸ்ரீ பெரும்புதூருக்கோ, ஒரகடத்துக்கோ நீங்கள் சென்றால், பார்க்கக் கூடிய பல தொழிற்சாலைகள், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவைதான். அப்போது, தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை அடைந்தது. இது தொடர்பாக, ஆங்கில வர்த்தக நாளிதழ்கள் அன்றைய முதலமைச்சர் கலைஞரைப் பாராட்டி எழுதினார்கள்.
அப்போது இன்னொரு கருத்தையும் சொன்னார்கள். "தமிழ்நாடுதான் முதலிடத்திற்கு வந்திருக்க வேண்டும். நிறுவனங்களை அதிகம் ஈர்த்த தமிழ்நாடு, அதனை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான், இரண்டாம் இடம் வழங்கப்பட்டது” என்று எழுதினார்கள். அதாவது தொழில்களை ஈர்ப்பது மட்டும் முக்கியம் கிடையாது! அப்படிப் பல்வேறு தொழில்களை ஈர்த்திருக்கிறோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அந்த வகையில், இந்த நிகழ்ச்சி மிகுந்த தேவையான ஒன்று. முதலீடுகள் சாதாரணமாக வந்துவிடாது. ஒரு ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். சட்டம், ஒழுங்கு முறையாக இருக்க வேண்டும். இவ்வளவும் இருந்தால்தான் முதலீடுகள் செய்ய முன் வருவார்கள்.
2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது என்றால், இந்த மாற்றங்களின் காரணமாகத்தான். தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜா மிகத் திறமையாக இந்தத் துறையை வழிநடத்தி வருகிறார். அவர் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது அவருக்கு நான் வைக்கக்கூடிய டெஸ்ட். எந்த டெஸ்ட் வைத்தாலும், அவர் “பர்ஸ்ட்” வருவார். அத்தகைய வேகம் கொண்டவர் அவர். செயல்தான் சிறந்த சொல் என நம்புகிறவன் நான். தொழில்துறையும் அப்படியே செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய செயல்கள் நமக்காகப் பேசும்படி நீங்கள் உங்கள் சாதனைகளைத் தொடர வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் சிறப்புப் பணி அலுவலர் அருண் ராய், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.