"முன்னாள் பள்ளி மாணவர்கள் பள்ளி மேம்பாட்டுக்கு உதவ வேண்டுமென்னும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் அழைப்பை வரவேற்கிறேன்" என கூறியுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E .R .ஈஸ்வரன். அவர் மேலும் கூறும்போது, "முன்னாள் மாணவர்கள் நிதி அளிக்கின்ற நிகழ்ச்சியை கூட அமைச்சர்கள் தவிர்ப்பது தான் உதவுபவர்களை ஊக்குவிப்பதா?.
ஒவ்வொரு பள்ளியிலும் படித்த முன்னாள் மாணவர்கள் அந்தந்த பள்ளியின் மேம்பாட்டுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற தமிழக கல்வி அமைச்சரின் அழைப்பு வரவேற்புக்குரியது மற்றும் காலத்தின் தேவை. முன்னாள் மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவிகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில்தான் இருக்கிறார்கள். அழைப்போடு மட்டும் நில்லாமல் அவர்களை பயன்படுத்தி கொள்ள அரசு முன்வர வேண்டும். அதை கல்வி அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். நான் படித்த என்னுடைய பள்ளிக்கு முன்னாள் மாணவனாக கடந்த 7 ஆண்டுகளாக வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிகளை செய்து வருகிறேன். வருடம் ஒருமுறை நடக்கின்ற அந்த நிதி அளிப்பு நிகழ்ச்சிக்கு கூட அமைச்சர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கிறார்கள். பல நேரங்களில் வருவதற்கு ஒப்புதலை கொடுத்துவிட்டும்கூட கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று சொல்லி அவமானப் படுத்தியிருக்கிறார்கள். இப்போதைய கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களேகூட அப்படிப்பட்ட அழைப்புக்கு செவிசாய்க்காமல் தவிர்த்தார் என்பதுதான் உண்மை.
ஆனால் இதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தொடர்ந்து என்னுடைய கடமையை நான் செய்து கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு கொடுத்திருக்கின்ற கல்வி அமைச்சருக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவதெல்லாம் உங்கள் அழைப்பு மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும். ஏதோ மக்கள் மத்தியிலே உங்கள் அழைப்பு சென்று சேர வேண்டும் என்பதற்காக ஊடகத்தை பயன்படுத்தி கொள்ள கூடாது.
அவரவர் படித்த பள்ளிகளுக்கு உதவ முன் வருகின்ற முன்னாள் மாணவர்களுடைய கடமை உணர்வை மதித்து ஊக்கப்படுத்தினால் தான் இன்னும் நிறைய மாணவர்கள் உதவ முன் வருவார்கள். ஒரு பள்ளியில் படித்து பிற்காலத்தில் முன்னேறி இருக்கின்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிக்கு உதவுவது கடமை என்று உணர வைத்தால் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கின்ற பள்ளிகள் மேம்படும். தமிழக கல்வி அமைச்சருடைய அழைப்பும், திட்டமும் பலனளிக்க கூடியது, அது உண்மை தன்மையோடு ஊக்குவிக்கப்பட்டால்" என்றார்.