தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் குறித்து பேசுகையில், “மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை. உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும்தான். என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக்கொள்வார். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான் கலைஞரிடம் சொல்லச் சொல்வேன். இன்றைக்கு அவர்கள் வயது முதிர்ந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். நான் சென்று பார்க்கின்றபோது என் அம்மா முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது.
அதேபோலத்தான் என்னுடைய மனைவி துர்காவும். என்னுடைய பாதி என்று சொல்கின்ற அளவுக்கு என்கூட இருக்கிறார். திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், இயல்பு என்று புரிந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள்! எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது என்னுடைய மனைவி துர்காதான். அடுத்து, என்னோட மகள் செந்தாமரை, அவரை அன்பின் வடிவம் என்று தான் சொல்லமுடியும். நான் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று அவர் இருப்பார். ஒரு அரசியல்வாதியினுடைய மகள் என்ற சாயல் தன் மேல் விழுந்துவிடக் கூடாது என்று உன்னிப்பாக அதில் உஷாராக இருப்பார். சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், கு. செல்வப்பெருந்தகை, இ. கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க.இளம்பகவத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வங்கிகளின் உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.