தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துக் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசினார். அப்போது அவர், “இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதனடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். “நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” என்று இங்கு பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஒடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்குப் பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.
எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், போதைப் பொருட்கள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது விசாரிக்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் பற்றிய பட்டியல் என் கையில் இருக்கிறது. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை. துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.