கலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன்என்பது பெருமை தான். ஆனால் அதனைவிடவும் திமுகவின் கடைக்கோடி தொண்டன் என்பதை பெருமையாக கருதுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளையொட்டி விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நேற்று நடந்தது. இதில் முரசொலியின் நிர்வாக மேலாண்மை இயக்குனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள், வேட்டி, சேலை ஆகிய நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதையடுத்து விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
நான் அதிகம் பேசமாட்டேன், செயலில் தான் காட்டுவேன். கதாநாயகன், முரசொலியின் நிர்வாகி, கலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்பது பெருமை தான். ஆனால் அதனைவிடவும் மிகப்பெரிய பெருமையாக நான் கருதுவது திமுகவின் கடைக்கோடி தொண்டன் என்பதைத்தான்.
கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத நான் எப்படி கட்சி கொடி ஏற்றலாம்? என்று சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். கொடி ஏற்றுவதை விடவும் பெரிய பொறுப்பு எனக்கு யாரும் கொடுத்துவிடப்போவது இல்லை. தொண்டர்களில் ஒருவராக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். பொறுப்பில் இருந்தால் தான் கட்சி கொடி ஏற்றவேண்டும் என்று எந்த சட்டம், திட்டத்திலும் இல்லை. கட்சி கொடி ஏற்றுவதற்கான எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கிறார். தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு, ‘விழாவுக்கு சரியான நேரத்துக்கு சென்றுவிடு, இல்லை என்றால் அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்’ என்று கூறினார். கலைஞரின் பெருமையை பேச எனக்கு எந்த அருகதையும் கிடையாது என்று கூறினார்.