Skip to main content

“நான் எம்.எல்.ஏவாக என் புலிக் குட்டிகளே காரணம்” - அமைச்சர் துரைமுருகன் உருக்கம் 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

"I am an MLA because of my tiger cubs" - Minister Duraimurugan

 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா வேலூர் மாநகராட்சித் துணை மேயர் சுனில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு மாளிகையைத் திறந்து வைத்தார்.

 

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “காட்பாடி சட்டமன்றத்திற்கு வெளியே சென்றால்தான் நான் அமைச்சர். வெளியில் தான் என்னுடைய அதிகாரம் இருக்கும். காட்பாடிக்குள் நான் வந்து விட்டால் நான் உங்களின் துரைமுருகன். துரைமுருகன் இன்றைக்கு வேண்டுமானால் அமைச்சராக இருக்கலாம். பொதுச்செயலாளராக இருக்கலாம். இந்த ஊர் தான் (கழிஞ்சூர்) என்னைத் திமுகவில் இணைய வைத்தது. இதே கழிஞ்சூரில் நான் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் நெத்தியில் திருநீறு பட்டையும் குங்குமமும் வைத்திருப்பேன். அப்போது என்னுடைய ஓவிய ஆசிரியர் சுப்பிரமணியம், குங்குமம் வைப்பதால் என்ன பயன்? திருநீறு பட்டை அணிவதால் என்ன பயன்? எனக் கேட்டார். அவரின் கேள்விகளே என்னைத் திமுகவில் இணைய வைத்தது.

 

இன்றைக்கு நான் எம்.எல்.ஏ. ஆகவும் அமைச்சராகவும் இருக்கின்றேன் என்றால் இரண்டு பேருக்கு நான் இந்தக் கூட்டத்தில் நன்றி சொல்ல வேண்டும். ஒன்னு வன்னிய ராஜா. அவரோடு சேர்ந்து வேலூர் துணை மேயர் சுனில்குமார். என்ன காரணம் என்று கேட்பீர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில்  ஓட்டு எண்ணுகிற போது நமக்கு வந்த ஓட்டெல்லாம் அவர்கள் ஓட்டு என்று தூக்கித் தூக்கிப் போட்டு விட்டுப் போனார்கள். நான் உள்ளே போகவில்லை. நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படி ஒரு திருட்டுத்தனம் செய்து கொண்டிருந்தபோது, அந்த இடத்தில் எப்படியாவது அவர்கள் ஜெயித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். நான் கூட எதற்கு வம்பு என இருந்தேன். ஆனால் இந்த இரண்டு புலிக் குட்டிகளும் உள்ளே போய் நுழைந்து அங்கே கர்ஜித்து சட்டம் பேசி அதற்குப் பிறகு தபால் ஓட்டுகளை எண்ண வைத்து அந்தப் பெருவாரியான ஓட்டுகள் நமக்கு உண்டு என்பதை நிரூபித்து என்னை வெற்றி வீரனாக அந்த அதிசயத்தை நிகழ்த்தியவர்கள் வன்னிய ராஜாவும், துணை மேயர் சுனில் குமாரும் தான். 

 

நான் உள்ளபடியே சொல்கிறேன். அந்த இரண்டு பேரும் இல்லாவிட்டால் நான் உள்ளே போய் இருக்க மாட்டேன். நான் எப்போதும் ஓட்டு எண்ணுகிற இடத்தில் உள்ளே போக மாட்டேன். அவர்கள் ஏதோ சொதப்பிட்டு போயிருக்கார்கள். ஆனால் என் நெஞ்சில் இருக்கும் வரையில் அவர்களுடைய நினைவு இருக்கும். நன்றி இருக்கும். அந்த நன்றி நான் இங்கே வெளிப்படுத்தியாக வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்