திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் தனது தொகுதிக்கு உட்பட்ட பழனி ரோடு, காட்டாஸ்பத்திரி, நாகல்நகர், சிலுவத்தூர் உள்பட நான்கு பகுதிகளில் பொதுமக்கள் உட்காருவதற்காக நிழற்குடை மற்றும் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, சுப்ரமணி செட்டி தெரு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 80 லட்சம் ஒதுக்கினார். இப்படி அடிப்படைவசதிக்காக அங்கங்கே ஒதுக்கப்பட்ட திட்டப் பணிகளையும் அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் அமைச்சரிடம் கொடுத்து தீர்த்து வைக்க வலியுறுத்தினார்கள். அப்பொழுது பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசனோ... தற்பொழுது மக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மக்கள் தங்கள் பிரச்சனையை மனுவாக எழுதியும் கூட எனது சட்டமன்ற அலுவலகத்திற்கும் கொண்டு வந்து தாருங்கள் உடனே உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும்.
அப்படி கொடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளைதான் தற்பொழுது ஒவ்வொரு பகுதியாக பூர்த்தி செய்து வருகிறேன். அதுபோல் உங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்ய கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறினார். இப்படி வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்த திட்டப்பணிகளை பார்வையிட மாவட்ட கலெக்டர் வினைய், எம்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் மருதராஜ், மாநகர ஆணையர் மனோகர், மற்றும் ராஜ்மோகன், சாரங்கி சரவணன் உள்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.