நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, ஆய்வு ஆராய்சித்துறை கம்யூனிகேசன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. நூற்றுக்கணக்கில் மாணவ மாணவியர்கள் பயில்கின்றனர். தவிர நெல்லை தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்டங்களின் கல்லூரிகளையும் உள்ளடக்கியுள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் இந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்தது. ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து செல்போன் மூலம்,பேசிய ஆடியோ சி.டி. ஒன்று மாணவர் அமைப்பு ஒன்றின் மூலம் பல்கலை தலைமைக்கு வந்தது. மேலும் ஆடியோ தொடர்பாக அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்த ஆடியோ தொடர்பாக நாம் பல்கலையின் துணை வேந்தர் பாஸ்கரிடம் முன்னதாக கேட்டதற்கு, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்கமிட்டி விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும் பட்சத்தில் அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்திய அந்தக் கமிட்டி தற்போது அறிக்கையை பல்கலை சிண்டிகேட்டிடம் சமர்ப்பித்தது. இதன் மூலம் சிண்டிகேட் கூட்டம் விவாதம் நடத்தியது. இறுதியாக பாலியல் புகாரில் சிக்கிய மூத்த பேராசிரியரான கோவிந்தராஜீக்கு கட்டாய ஒய்வு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்கலையில் ஆசிரியர் பணியை முறைப்படி செய்யாத ஆங்கிலத்துறை இணை ஆசிரியர்கள் மூன்று பேரை பணி நீக்கம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து நாம், பல்கலையில் துணை வேந்தர் பாஸ்கரிடம் பேசியதில், ஆடியோ தொடர்பாக பேராசிரியர் கோவிந்தராஜின் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் கமிட்டியின் விசாரணை அறிக்கையின்படி சிண்டிக்கேட் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.