குடிபோதையில், காவல்துறையினரிடம் நானும் போலீஸ்தான் எனக்கூறி அலப்பறையில் ஈடுபட்ட வாலிபர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் காவல்நிலைய போக்குவரத்து எஸ்.ஐ. சவுந்தரராஜன் தலைமையில் காவல்துறையினர், சனிக்கிழமை (ஏப். 23) இரவு, அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிஞ்சி நகர் டோல்கேட் அருகே சாலையோரமாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் அந்த கார் அருகே சென்று பார்த்தபோது, காரில் வந்த நான்கு பேர் திறந்தவெளியில் மது குடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. பொதுவெளியில் மது குடிக்கக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்தனர். போதையில் இருந்த நான்கு பேரும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்தக் கும்பலில் இருந்த ஒருவர், 'நானும் போலீஸ்தான். யாரிடம் பேச வேண்டும் என்று சொல். உடனே பேசுகிறேன்...' என்று கூறி அலப்பறை செய்துள்ளார். மற்றொரு நபர், காலி மது பாட்டிலை காட்டி, 'அமைதியாகச் சென்று விடுங்கள். இல்லாவிட்டால் பாட்டிலால் குத்தி கொன்று விடுவோம்,' என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்து கிளம்பிய நிலையில், அந்தக் கும்பல் காவல்துறையினர் சென்ற ஜீப்பின் இண்டிகேட்டர் லைட்டை கல்லால் தாக்கி உடைத்துள்ளனர். இதையடுத்து எஸ்.ஐ சவுந்தரராஜன், இச்சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகர காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, அந்த நான்கு பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், பிடமனேரியைச் சேர்ந்த விஜயகுமார் (40), முருகன் (51), சந்தோஷ்குமார் (35), முனிராஜ் (54) என்பது தெரியவந்தது. இவர்களில் முருகன், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகவும், விஜயகுமார் தேநீர் காகித குவளை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதும், சந்தோஷ்குமார் முன்னாள் ஊர்க்காவல்படை வீரர் என்பதும் தெரியவந்தது.
சந்தோஷ்குமார்தான், தன்னை போலீஸ் எனக்கூறி உதார் விட்டுள்ளார். அவர் ஊர்க்காவல் படையில் இருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் சிலருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு, வெளியில் தன்னை போலீஸ்காரர் எனக்கூறி பலரை மிரட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வார இறுதி நாள் என்பதால், வீட்டுக்குச் செல்லாமல் நால்வரும் சாலையோரமாக நின்று மது குடித்துள்ளனர். உச்சக்கட்ட போதையில் இருந்தபோது அவர்களை கண்டித்த காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.