இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் (மார்ச் 10-11) மாநிலக்குழுக்கூட்டம் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் உள்பட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காவிரி டெல்டா பிரதேசத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,40,000 சதுர கி.மீ. பரப்பளவில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை நிலம் மற்றும் கடல் பகுதிகள், காவிரி வடிநில பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் காலங்களில் இவற்றில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளிக்கப்படலாம். அதேபோன்று தமிழ்நாட்டில் நிலப்பகுதி, கடல் பகுதிகளில் முதல்கட்டமாக 4,099 சதுர கி.மீ. பரப்பளவில் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் - தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் - வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 சதுர கி.மீ. நிலப்பகுதியில் 10 கிணறுகள், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. கடல் பகுதியில் 4 கிணறுகள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைத் அடுத்த புஷ்பாவனம் வரை 2,574 சதுர கி.மீ. கடல் பகுதியில் 10 கிணறுகள் என மொத்தம் 24 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது.
இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் வாயு ஆகியவற்றிற்கு தனித்தனி உரிமம் என்பதை மாற்றி ஒரு உரிமம் பெற்றால் எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில் புதிய திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தனியார், உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களும் இப்பணியினை செய்ய ஏலம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் காவிரி டெல்டா பகுதிகள் வறட்சி அடையும். கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் 64 திட்டங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளதில் 24 திட்டங்கள் தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கக்கூடிய காவிரி டெல்டா பிரதேசத்தை பாலைவனமாக்கிவிடும். எனவே, மத்திய அரசின் இத்திட்டத்திற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து கைவிட செய்ய வேண்டும். விவசாயிகள் - மீனவர்களின் வாழ்வை பாதிக்கும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
காவிரி பாசனப்பகுதியை பாலைவனமாக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டிக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.