இந்தியாவில் டிக் டாக் செயலியில் தங்கள் நடிப்பு திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் எண்ணிக்கை 12 கோடி பேர் என்று டிக் டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ வெளியிடுபவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க இனி டிக் டாக்கிற்கு அடிமையானவர்களுக்கு அந்த நிறுவனமே கவுன்சிலிங் அளிக்கவும் உள்ளது.
டிக் டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு தங்கள் திறமைகளை காட்டி வந்த சிலர் தற்போது டிக் டாக்கில் கிடைக்கும் லைக்கிற்காக ஏங்கி முழு நேர அடிமைகளாக மாறிவிட்டனர். இந்தியாவில் டிக் டாக், ஹலோ, விகோ போன்ற வீடியோ செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு பொழுதுபோக்கு விரும்பிகளை தொடர்ந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.
இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, ஹிந்தி உட்பட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவில் பட்டிதொட்டிகளிலும், நவநாகரீகமான நகரங்களிலும், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என டிக் டாக்கில் செய்கின்ற சேட்டைகளை பார்த்து, ரசித்து அதனை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர்கள் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக் டாக்கில் ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் 60 லட்சம் வீடியோக்களை பணியாளர்கள் அழித்துள்ளதாக பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
12 கோடி பேர் தங்களது வீடியோக்களை டிக் டாக்கில் பதிவு செய்துள்ளதாகவும், ஹலோ செயலியில் நான்கு கோடிப் பேரும், வீகொ செயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளை காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள டிக் டாக் செயலியை பாதுகாப்பானதாக மாற்ற 13 விதிகளுடன் செயல்பாட்டை மேம்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 13 வயதிற்கு உட்பட்டோர் டிக் டாக் பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என நேர கட்டுப்பாடும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முகநூல் போல கடவு சொல் பயன்படுத்தும் முறை செயல்பாட்டில் உள்ளது. இதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆபாச வீடியோக்கள் உடனடியாக நீக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 13 விதிகள் அடங்கிய உத்தரவாதம் கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக் டாக்குக்கு விதிக்கப்பட்ட தடை விலகல் ஆனது எனவும் பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக் டாக்கை முன்வைத்து தற்கொலை சம்பவங்கள் மற்றும் சாதிய மோதல்கள், ஆபாச பேச்சுக்கள், கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணியமர்த்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோவை பதிவிட்டால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் திட்டம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தநிலையிலும் இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடைவந்துவிட கூடாது என இவ்வளவு சிரத்தை எடுக்க காரணம் இந்த செயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிப்பதால்தான் பைட் டான்ஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளக்கூடாது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பதிவிடும் வீடியோக்கள் டிக் டாக் செயலியை மீண்டும் தெருவிற்கு இழுத்து வந்து விடும் என்றே தோன்றுகிறது.