கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காந்தி ரோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனா என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தார். சீனிவாசன், கல்பனா திருமணம் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக சீனிவாசன் மனைவியுடன் கடந்த 1.6.2013 அன்று பண்ருட்டி வந்தார். பண்ருட்டியில் இருந்து பைக்கில் கடலூர் சென்றனர்.
கடலூர் சில்வர் பீச் சென்று பின்னர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சினிமா தியேட்டரில் சினிமா படம் பார்த்தனர். இரவு 7 மணியளவில் வீடு திரும்பினர். வீடு திரும்பும் போது பண்ருட்டி திருவதிகை ராசாபாளையம் அருகில் வந்தபோது இவர்களது பைக்கை திடீரென்று வழிமறித்த ஒரு கும்பலால் சீனுவாசன் கொலை செய்யப்பட்டார். ஆனால் அந்த கும்பல் கல்பனாவை ஒன்றும் செய்யவில்லை. மேலும், கணவனை கொலை செய்து விட்டு நகைகளை பறித்து கொண்டதாக கல்பனா புகார் கொடுத்தார்.
இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில், கல்பனா அவரது ஆண் நண்பர் தினேஷ் பாபு என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கூலிப்படையாக செயல்பட்ட முரளி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவடட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜவஹர் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பண்ருட்டி பக்கிரி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி கல்பனா மற்றும் அவரது ஆண் நண்பர் தினேஷ்பாபு இருவருக்கும் இரட்டை ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.