வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் மனைவியை தாக்கி எரித்துக்கொன்ற கணவனும் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. கூலித் தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ராஜா வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதும், இதனை உமா கண்டிப்பதுமாக இருந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்போது அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி வருவர்.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் ராஜா குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி உமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த ராஜா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உமா மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் உடல் கருகிய நிலையில் உமா உயிருக்கு போராடி அலறினார். உமாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இருவரும் தீக்காயம் அடைந்து தவித்ததை பார்த்ததும, அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உமா பரிதாபமாக இறந்தார். ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து உமாவின் தாய் ராணி சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.