திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன். இவருடைய மனைவி மஞ்சு(42). கமலேசன் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு முதல் கமலேசன் மனைவி மஞ்சுவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் குப்பன்(51) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு முதல் மஞ்சு மற்றும் குப்பன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குப்பன் மஞ்சுவிற்கு பத்து லட்சத்திற்கும் மேலாகச் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பணத்தைக் கேட்டு அவ்வப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இதேபோல் தகராறு ஏற்பட்டதும் குப்பன் மஞ்சுவின் வீட்டிற்குச் சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மஞ்சு மீது ஊற்றிக் கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் விரைந்து வந்த போலீசார், மஞ்சுவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மஞ்சுவை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கந்திலி போலீசார் குப்பனை பிடித்தனர். குப்பனுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெட்ரோல் ஊற்றி பெண்ணை கொளுத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.