மனைவிக்குக் கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச நிலுவைத் தொகை 2.18 லட்சம் ரூபாயை, 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டைகளில் எடுத்து வந்திருந்த கணவரால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிடையூர் மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜு (57). ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவருடைய மனைவி ஜீவனாம்சம் கேட்டு சங்ககிரி 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சாந்திக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். ஆரம்பத்தில் சில மாதங்கள் சரியாக வழங்கி வந்த ஜீவனாம்ச தொகையை பின்னர் ராஜு நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, மீண்டும் சங்ககிரி நீதிமன்றத்தில் சாந்தி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜீவனாம்ச நிலுவைத் தொகையான 2.18 லட்சம் ரூபாயை ராஜு உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்தும்படி’ உத்தரவிட்டார். இதையடுத்து ராஜு, ஏப். 18ம் தேதி காலை, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ஜீவனாம்ச நிலுவைத் தொகையைச் செலுத்த வந்திருந்தார். அந்தத் தொகையை அவர் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் மூட்டையாக கட்டிக் கொண்டு எடுத்து வந்திருந்தார். அத்தொகையை அவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். ராஜுவின் இந்த செயல், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.