Skip to main content

அந்நியன் டூ அம்பி; திருமணத்திற்குப் பிறகு மனைவிக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
husband beats his wife for dowry after marriage

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு 26 வயதாகிறது. திவ்யாவுக்கும் கோவையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கிஷோருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்தபோது, கிஷோர் தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்வதாக கூறியிருக்கிறார். 

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக.. திவ்யாவின் பெற்றோர் சார்பில் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் திருமண செலவிற்கான பணம் ஆகியவற்றை கிஷோர் குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, திருமண நாளில் மண்டப கட்டணத்தை கொடுப்பதற்காக திவ்யாவின் நகையை விற்று அந்த பணத்தை கொடுத்துள்ளனர். இப்படி பல்வேறு இன்னல்களுக்கு பிறகு திவ்யாவை அவரது பெற்றோர் கரை சேர்த்துவிட்டனர். 

இந்த இளம்பெண் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்க நினைத்த சமயத்தில், இவருக்கு ஆரம்பமே பேரிடியாக அமைந்தது. ஆரம்பத்தில் நல்லவர் போல் வேடம் போட்ட கிஷோரின் முகத்திரை  திருமணமான சில நாட்களிலேயே கிழிய தொடங்கியது.   கிஷோர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். ஒருகட்டத்தில், மது போதைக்கு அடிமையான கிஷோர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். தள்ளாடிய போதையில் வீட்டிற்கு வரும் கிஷோர் தன் மனைவி திவ்யாவுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் மோதல் முற்றி, திவ்யாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இதனிடையே, கிஷோர் தனக்கு திருமணமான ஒருசில மாதங்களிலேயே திவ்யா வீட்டில் வரதட்சணையாக கொடுத்த நகைகளை விற்று உல்லாசமாக ஊர் சுற்றி வந்திருக்கிறார். மேலும், திவ்யாவின் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தார் திவ்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாத திவ்யா தனது பெற்றோரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனிடையே, நாளுக்கு நாள் கிஷோர் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக திவ்யாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

தான் ஒரு அரசு வங்கி அதிகாரி போல் நாடகம் ஆடிய கிஷோர்குமார் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பாவி பொதுமக்களிடம் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருகிறேன், அரசு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி ஏராளமான இளைஞர்களிடம் இருந்து பண மோசடி செய்திருக்கிறார். அதே போல், போலி பத்திரங்களை கொடுத்து கடன் வாங்கி அந்த கடனையும் கட்டாமல் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. ஒருகட்டத்தில்,  திவ்யாவின் அப்பாவிடமே கிஷோர் தனது வேலையை காட்டியிருக்கிறார். அவரிடம் போலியான இரண்டு நில பத்திரத்தை கொடுத்து கிஷோர் 10 லட்ச ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். நாளடைவில் இதையெல்லாம் தெரிந்துகொண்ட திவ்யா தான் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர்.. தனது மனைவி என்றும் பாராமல் திவ்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த திவ்யா திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட திவ்யா இச்சம்பவம் குறித்து  தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திவ்யாவின் கணவர் கிஷோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட சமூக நல அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திவ்யா மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம்  மனு அளித்தார். இதன் அடிப்படையில் மோசடி ஆசாமி கிஷோர் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த மோசடி மன்னன் கிஷோர் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து.. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பிறகு கிஷோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

சார்ந்த செய்திகள்