சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி( 36). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சமையல் வேலை செய்யும் முருகன் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனை மனைவி ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாக இருந்து வந்தது. தகராறு நடக்கும் போது அக்கம் பக்கத்தினர் சென்று இருவரையும் சமாதானம் செய்து வைப்பார்கள். இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி சமையல் வேலைக்கு சென்று விட்டு வேலை முடித்துவிட்டு முருகன் 30-ந்தேதி மதியம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்பொழுது அவர் மது போதையில் இருந்துள்ளார். இதை ரேவதி கண்டித்துள்ளார். மேலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது சம்பாதிப்பதை குடித்து அழித்தால், எப்படி 2 பேரையும் கரை சேர்ப்பது என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரேவதி அரிவாள் மணையால் முருகன் தலையில் வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து முருகன் வெளியே சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் போதையில் இருந்துள்ளதால் கணவன், மனைவி இருவருக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன் காய்கறி வெட்டும் கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதை பார்த்த குழந்தைகள் சத்தம் போட்டு அலறியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி சென்று ரேவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தகவலறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.