
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. மாத்தூர் ஊரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). கூலி தொழிலாளியான இவரது மனைவி தனசேகரி (35). தனசேகரிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்துவந்துள்ளது. அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துவந்துள்ளார். ஆனாலும், அவரது வயிற்றுவலி நிற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த தனசேகரி, கடந்த 19ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வீட்டிலேயே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் பாஸ்கர், ஓடிச்சென்று மனைவி மீது பற்றிய தீயை அணைக்க கடும் முயற்சி செய்துள்ளார். அதில் கணவன், மனைவி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் கணவன், மனைவி இருவரையும் மீட்டு உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு பத்து மற்றும் எட்டு வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தாய், தந்தை இருவரையும் ஒரே நேரத்தில் இழந்து தவிக்கும் அந்த இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவரது உறவினர்களும் ஊர் மக்களும் மிகுந்த கவலையிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.