Skip to main content

ஸ்டெர்லைட் வழக்கு; ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து!

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
 


ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணி நடைபெற்றது. 144 தடையை மீறி பேரணி சென்றதாக அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதமானது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சத்தியபாமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்தது ஏன்? எந்த அடிப்படையில் அந்த உத்தரவில் கலெக்டர் கையெழுத்திட்டார்? கையெழுத்திடும் முன் வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் ஏன் இயந்திரத்தனமாக செயல்பட்டார்? இது ஜனநாயக ஆட்சி நடக்கும் மாநிலமா? அல்லது போலீஸ் ஆட்சி நடக்கும் மாநிலமா? முந்தைய வழக்குகளில் ஜாமீன் விபரங்கள் தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை உத்தரவில் ஏன் குறிப்பிடவில்லை? என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதி தூத்துக்குடி ஆட்சியர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அவருக்கு நீதிபதிகள் அறிவுரைகள் வழங்கியதுடன், வக்கீல் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

“குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது. ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. உங்களுடைய ஒரு கையெழுத்து தனிநபரின் சுதந்தரத்தைப் பறிக்கும் என்பதை நினைவில் கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்று செயல்படக்கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும்’ என கலெக்டருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்