புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன். மாணவர்களிடம் இயற்கை வழி வாழ்வு, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக மஞ்சள் பை உபயோகிக்க வலியுறுத்தியும், மரங்களை நட்டு பராமரிப்பது குறித்தும் அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சைக்கிள் பயணத்தின் போது பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பை கொடுத்து உறுதிமொழி எடுக்கவைத்தும் வருகிறார்.
இதுபற்றி ஆசிரியர் சீ.சரவணன் கூறும் போது..
கடந்த ஜூன் 30 ஆம் தேதி புதுக்கோட்டை மாப்பிள்ளையார் குளம் அருகே கனமழை பெய்தது. அப்பொழுது வரத்துவாரி பாலத்தின் அடியில் உள்ள தண்ணீர் வெளியேறும் குழாயில் கேரிப் பைகள் அடைத்திருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் பாலத்தின் மேல் உள்ள சாலையில் அதிகளவில் சென்றது.. அப்பொழுது அவ்வழியே வந்த பள்ளிக் குழந்தைகள் அந்த இடத்தை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் கடக்க நான் உதவி செய்தேன். அதன் பிறகு தான் மக்களிடம் கேரிப்பையை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.. வருடந்தோறும் காந்தி ஜெயந்தி அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் மறைந்த நம்மாழ்வாரின் உரைகளை கேட்ட பொழுது அவரின் மீது பற்று ஏற்பட்டது.
அன்றிலிருந்து இயற்கை வாழ்வு குறித்த தேடலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். திருத்துறைப்பூண்டியில் நெல்ஜெயராமன் நடத்தும் நெல் திருவிழாவில் கலந்து கொள்வேன்.. அங்கே அவர் கொடுக்கும் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு வந்து விவசாயியும் ஆசிரியருமாகிய காட்டுப்பட்டி சின்னக்கண்ணுவிடம் கொடுப்பதை கடமையாக செய்துவந்தேன். வீட்டு மாடியிலும் மாடித் தோட்டம் அமைத்து பராமரித்துவருகிறேன்.
நான் எப்பொழுதும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதையே தனது வாடிக்கையாக செய்துவருகிறேன். என்னுடைய திருமண நாள் 2014 செப் 4 அன்று வந்திருந்த அனைவருக்கும் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கினேன்.
பள்ளியின் முக்கிய விழாக்களின் போதும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன். தற்பொழுது எனக்கு பி.எட் பயின்றமைக்காக ஊக்கத் தொகை கிடைத்தது. அந்த பணத்தில் ஒரு பகுதியை நல்வழியில் செலவிட எண்ணி என் மனதில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்ய எண்ணம் வந்தது. அதன்படி பாரதி பிறந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாங்குடியில் எனது பயணத்தை தொடங்கி மாராயபட்டி, புல்வயல், பெருமாநாடு, பெருஞ்சுனை , சுந்தர்ராஜ்நகர், கோதாண்டராம்புரம், கீழபழுவஞ்சி, மற்றும் பல பள்ளிகளில் இயற்கை வாழ்வு வாழ மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும், மரம் நட்டுப்பராமரிப்பதின் அவசியம் குறித்தும், கேரிப்பையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
எனது பயணம் இந்த வாரம் நிறைவு பெற்று விடும். அடுத்து ஜனவரிக்குப் பிறகு விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்கள் நாங்களும் உங்களை போல் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என என்னிடம் கூறும்பொழுது என் மனம் மகிழ்வாக இருக்கிறது. நாம் எப்படி நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல மண்ணில் வாழ்ந்தோமோ அதுபோல நம் சந்ததியும் வாழ வேண்டும் என்பதற்காகவே பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன். தற்பொழுது உருவம்பட்டி பள்ளியில் மாணவர்கள் என்னை அன்போடு வரவேற்று அவர்களது உற்சாக செயல்பாடும் என்னை மேலும் இந்த பணிகளை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற உந்துதலைத் தந்துள்ளது என்றவர் கஜா புயலுக்கு கோடிக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டது. அந்த மரங்களை நிமிர்த்த முடிந்த மரங்களை நிமிர்த்துவதுடன் இப்போதே மரக்கன்றுகளை நட்டால் சில ஆண்டுகளில் அழிந்த மரங்களை மீட்க முடியும். ஆல், அரசு போன்ற நிழல் தரும் மரங்கள் சாய்ந்திருந்தால் அந்த மரங்களை காக்க போத்துகளை நட்டால் வேகமாக வளரும் என்றார்.