கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் அருள்குமார் (38) மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 35). இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு 2 மகள்கள், 1மகன் உள்ளனர். அருள்குமார் தான் சம்பாதிக்கும் பணத்தை தினமும் குடித்து செலவழித்து வந்துள்ளார். குடும்பம் நடத்துவதற்கு பணம் தருவதில்லை. மேலும் அருள்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கத்தால் வீட்டில் தூங்க முடியாமல் அருகில் உள்ள கோயிலில் முத்துலட்சுமி குழந்தைகளுடன் உறங்கி விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வழக்கம் போல அருள்குமார் மது குடித்துவிட்டு வந்து கிடந்தவர் மனைவியிடம் தகராறு செய்தார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முத்துலட்சுமி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார். அதையடுத்து கணவர் அருள்குமாரும் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இந்த சமயத்தில் முத்துலட்சுமி தீக்குச்சியை பற்ற வைத்ததால் இருவர் மீதும் தீ பற்றியது. உடனே அருகில் இருந்த பொதுமக்கள் பலத்த தீக்காயமடைந்த அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துலட்சுமியும், மதியம் அருள்குமாரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்கள் இருவரும் இறந்த நிலையில் இவர்களது 3 குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.