கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று, கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வேலை வழங்கப்படாதவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நிரந்தர வேலை வேண்டி இன்று (23.12.2021) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சிய போக்கைக் கண்டித்தும், உடனடியாக நிரந்த வேலை வழங்கக் கோரியும் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட, அப்ரண்டீஸ் தொழிலாளர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மண்டபத்திற்குள்ளும் உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனுக்குடன் வேலை வழங்கி வருகிற நிலையில், என்.எல்.சி. நிர்வாகம் மட்டும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி அலட்சியப்படுத்திவருகிறது. இதனால் என்.எல்.சி. நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து, மாற்று நிறுவனத்திற்கும் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அப்ரண்டிஸ் முடித்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.