தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. முன்னதாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் சிக்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதி அடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதே சமயம் ரயிலில் மீதமுள்ள 530 பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் நேற்று மாலை மீட்கப்பட்டனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சென்னை ரயில் நிலையம் வந்துள்ள மக்கள் மீட்புப்படையினர் தங்களை மீட்டிருந்தாலும், அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்காக செய்த உதவியை மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து நன்றியை வெளிப்படுத்தினர். நேற்று ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் முழுமையாக உணவு கொடுக்க முடியவில்லை. தொலைத்தொடர்பு ரத்து போன்ற பிரச்சனைகளால் ரயில் நிலையத்தில் பயணிகள் சிக்கியுள்ளதை நேற்று மதியத்திற்கு பிறகு தாமதமாக தெரிந்துகொண்ட அண்டை கிராம மக்களான புதுக்குடி, மேலூர் கிராம மக்கள், தாங்கள் நீரால் சூழப்பட்டிருந்த போதிலும் வீட்டிலிருந்த அரிசி, எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சென்று அங்கேயே சமைத்து பயணிகளுக்கு உணவளித்துள்ளனர்.
தங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் பாட்டில்களையும் வழங்கியுள்ளனர். அவர்களால் மட்டும்தான் எங்களால் உயிர்வாழ முடிந்தது. உள்ளூர் மக்கள் இல்லைனா உயிர் பிழைச்சிருப்போமா தெரியல. நேற்று மாலையெல்லாம் அவர்களால் தான் எங்களால் சர்வைவல் பண்ண முடிந்தது என மீட்கப்பட்டவர்களில் பலர் உருக்கமாக தெரிவித்தனர். வெள்ள நீரில் சிக்கியுள்ள புதுக்குடி, மேலூர் மக்களையும் தமிழக அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.