தனது தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண வேலைகளை ஆய்வு செய்து வருகிறார் கனிமொழி எம்.பி.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த கரோனா கால மக்களுக்கான நிவாரணத் தொகையை மே.5 அன்று கோவில்பட்டியின் சண்முகசிகாமணிநகர்ப் பகுதியில் வழங்கிக் கொண்டிருந்தார் கனிமொழி.
மக்களுக்கான நிவாரணத் தொகையினை கனிமொழி வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மேடை ஏறிய 11 வயது சிறுமி, தன் கடிதத்துடன் 1,970 ரூபாயையும் சேர்த்து அவரிடம் கொடுத்திருக்கிறார். பரிவோடு பணத்தையும் கடிதத்தையும் பெற்றுக் கொண்ட கனிமொழி கடிதத்தைப் படித்ததும் கண்கலங்கிவிட்டார். கிட்டத்தட்ட அவரது மனம் உடைந்த நிலைதான்.
''என்னோட பேர் ரிதனா. நான் 5 முடித்து 6வது வகுப்பு போகப் போகிறேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. என்னோட அப்பாவின் வைத்தியச் செலவிற்காக நான் சேமித்து வைத்த பாக்கெட் மணி தான் இது. அப்பா வைத்திய வசதி கிடைக்காமல் இறந்து போனார். என்னயப் போல கரோனாவால அப்பாக்களை இழந்து எந்த ஒரு பிள்ளையும் தவிக்கக் கூடாது. அதனால் கரோனா நோய்த் தடுப்புப்பணியில இந்தப் பணத்தச் நேர்த்துடுங்க'' என்று சொல்லித் தன் கடிதத்தையும் பணத்தையும் கொடுத்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதமும் பணமும் அவளின் மனித நேயமும் தான் கன்மொழியை நிலைகுலைய வைத்திருக்கிறது.
அடுத்தவர்களுக்குத் தெரியாமல் தன் கண்களைத் துடைத்துக் கொண்ட கனிமொழி, வாஞ்சையுடன் சிறுமியின் தலையைத் தடவியவர், அவளது படிப்பு குடும்பச் சூழலை விசாரித்தவர், நிச்சயம் பணத்தச் சேர்த்துடுறேன். ஒன்னோட படிப்புச் செலவுகளையும் நான் ஏற்றுக்கொண்டு செய்து தருகிறேன் என அந்தச் சிறுமியிடம் தன் உறுதியையும் ஆறுதலையும் தந்திருக்கிறார் கனிமொழி.
ரிதனா என்ற அந்தப் பள்ளி மாணவி, கோவில்பட்டி ராஜீவ் நகர்ப் பகுதியில் வசித்து வந்த நாகராஜ், அமுதா தம்பதியரின் ஒரே மகள். தந்தை பி.காம் பட்டதாரி. தாய் அமுதா எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ். திருமணத்திற்கு முன்பு வரை அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றின் விரிவுரையாளர் பணியிலிருந்தவர் அமுதா. திருமணத்திற்குப் பின்பு மகளையும் வீட்டு வேலைகளையும் கவனிக்கும் பொருட்டு தன் கல்லூரி வேலையைவிட்டிருக்கிறார். அதே சமயம் கணவருக்கு பெங்களூரூவில் நிறுவனம் ஒன்றின் மேலாளர் பணி கிடைக்க, குடும்பத்துடன் அங்கே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். நாகராஜின் வேலை, அமுதாவின் பட்டப்படிப்பு தவிர அவர்களிடம் வேறு சொத்தோ வருமான வழிகளோ கிடையாது. இதுதான் அவர்கள் குடும்பத்தின் உறைமோர்.
பெங்களூரில் ரிதனா மெட்ரிக் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்று கொண்டிருந்த நேரத்தில் அவளின் செலவிற்காக தந்தை அன்றாடம் பாக்கெட் மணி கொடுப்பது வழக்கம். அதில் பைசா செலவழிக்காமல் அப்படியே சேமித்து வைத்திருக்கிறாள் ரிதனா. அது கணிசமான தொகையளவு வளர்ந்திருக்கிறது.
பெங்களூரில் அன்றாடம் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள், கால அவகாசமில்லாத காரணத்தால் பெரும்பாலும் தங்களின் பிள்ளைகளைக் காலை உணவோடு அனுப்புவது ஒருசில வேளைகளில் நடப்பது இயல்பானதுதான்.
ஆனால் காலை உணவு முடித்து மதியம் உணவையும் ரிதனா கையோடு கொண்டு வந்து விடுவாள். மதிய உணவு இடைவேளையின் போது தனது வகுப்பின் சக மாணவிகளில் சிலர் மதிய உணவின்றித் தவிப்பதையும் பார்த்த ரிதனா, தன் உணவை அவர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். உணவு இல்லாத சமயம், 8540 ரூபாய் என சேர்ந்த தன் சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், ரொட்டி என்று வாங்கிக் கொடுத்து அவர்களின் பசியமர்த்தியிருக்கிறார். பல வேலைகளில் தன் சக மாணவிகள் நோட்புக் எழுது உபகாரணங்கள் இல்லாமல் தவித்தது கண்டு அவர்களுக்காகச் தனது சேமிப்பு பணத்தைச் செலவு செய்திருக்கிறாள். இப்படித்தான் அந்தப் பிஞ்சு மனதில் இரக்க குணமும், மனிதநேயமும் துளிர்த்திருக்கிறது. காலச் சூழல்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. விதி, ரிதனாவின் தந்தை நாகராஜை ரத்த உறைவு நோய் தாக்கியிருக்கிறது. 2020 பிப்ரவரி ஆரம்பத்தில் அவரை பெங்களூரின் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார் மனைவி அமுதா. வீட்டின் மொத்த சேமிப்பின் லட்சங்கள் காலியாகியும், வந்த நோய் போனதானத் தெரியவில்லை.
அப்பா, நீங்க கொடுத்த பாக்கெட் மணிய ஒங்க சிகிச்சைக்காக நா சேத்துவைச்சப் பணம்பா இது. ஒங்க வைத்தியச் செலவுக்கு வச்சுக்குங்க என்று சொன்ன மகளிடம், வேண்டாம்மா. அது ஒனக்கானது வைச்சுக்கோ என யதார்த்தமாகச் சொன்ன தந்தை நாகராஜ் 2020 பிப் 10ல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். கணவனை இழந்ததை கைம் பெண். கையில் ஒரே மகள். ஒண்டியாகவே கோவில்பட்டி திரும்பிய தாய் அமுதா, அன்றாடம் கொத்தனார் வேலை பார்த்துப் பிழைப்பை நகர்த்துகிற தன் தந்தையின் ஆதரவிலிருக்கிறார் தற்போது.
கரோனா கொடூரத்தால ஆந்திராவில் உயிரிழந்த தாயின் மடியில் அவளது பிள்ளை கிடந்து அழுவதையும் கரோனாவால் பலபேர் செத்து விழுந்து அவுக பிள்ளைக கதறி அழுவதையும், தொலைக்கட்சியில் பாத்த சின்னப்புள்ள ரிதனாவோட மனசு பாதிச்சிருக்கு போல. தன்னயப் போல, வேற எந்தப் பிள்ளைகளும் கரோனாவால அப்பா, அம்மாயில்லாமத் தவிக்கக்கூடாதுன்னு தான் ரிதனா, தன்னோட சேமிப்புல, அவ, மத்தவங்களுக்கு உதவுனது போக மிச்சமுள்ள 1970 ரூபாயையும் கரோனாத் தொற்று தடுப்பு நிதிக்குத் தரணும் சொன்னாத நானும் சரிம்மான்னு சொன்னேன். அதக் குடுக்குற வழி தெரியாமயிருந்தப்ப கனிமொழியம்மா இந்தப் பக்கம் நிவாரணப் பணிக்காக வந்தப்ப அவளே எழுதுன கடிதத்தையும் பணத்தையும் சேர்த்து அவங்க கிட்டக் குடுத்தா. இப்ப நா கணவனை இழந்து புள்ளையோட ஒண்டியாயிட்டேன். பொழைப்புன்றது பெரிய பாரமாயிருக்கு. குடும்பத்தில முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைன்னு ஸ்டாலின் அய்யா சொல்லியிருக்காக. வேலை கெடைக்கும்னு நம்பிக்கையோடிருக்கேன்யா. தழுதழுத்த குரலில் சொன்னார் ரிதனாவின் தாய் அமுதா.
குழந்தைகள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். நம்பிக்கை தானே வாழ்க்கை. என்கிறது மானுட தர்மம்.