புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அண்மையில் திருவள்ளூரில் பள்ளிக் கட்டிடத்தில் பூட்டுகளில் மனித கழிவு பூசப்பட்டது மற்றொரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேட்டூரில் பள்ளியில் உணவு தயாரிக்கும் கட்டிடத்தில் மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேட்டூரில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவேரிபுரம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1958 ஆம் ஆண்டு காமராஜர் நேரில் வந்து இந்த பள்ளியை திறந்து வைத்துள்ளார். அந்த அளவிற்கு பாரம்பரியம் மிக்க பழமை வாய்ந்த இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவல் பாதுகாப்பு இல்லாதது அந்தப்பகுதி மக்களின் பெரும் குறையாக இருந்து வருகிறது.
இதனைப் பயன்படுத்தி சில குடிமகன்கள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை தூக்கிச் வீசும் அவலங்களும் இதற்கு முன்னே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மர்ம நபர்கள் சிலர் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கான சத்துணவு கூடத்தின் சுவரில் மனிதக் கழிவுகளை பூசி விட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை பள்ளிக்கு வந்த ஊழியர்கள் மாணவர்களுக்காக உணவு சமைக்க சென்ற பொழுது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், கல்வி மேலாண்மை குழுவிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, சுவரில் ஒட்டி இருந்த மனிதக் கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் மேட்டூர் கோட்டாட்சியர், மேட்டூர் காவல்துறையினர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரும் ஒரே நேரத்தில் வந்து குவிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.